தென்னிந்திய திரையுலகை ஆளும் அழகிகளாகவும், போட்டியாளர்களாகவும் கருதப்படும் இரண்டு நடிகைகள், நயன்தாரா, சமந்தா ஆகியோர் ஆவர். இருவரின் தொழில் போட்டி எந்த இடத்திலும் இருவரின் நட்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இருவரும் முதல்முறையாக இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் இரண்டு காதலிகளாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. `ரெண்டு காதல்’, `டூ டூ டூ’ ஆகிய இரு பாடல்களும் வைரலான நிலையில், அவற்றின் காணொளி வடிவத்தில் இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கு காரணமாகத் தள்ளி போனது. எனினும் அடுத்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தப் படம் முன்னணி ஓடிடி தளம் ஒன்றில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா ஆகிய இருவருடனும் தனித்தனியாக ஏற்கனவே நடித்துள்ள நிலையில், முதல்முறையாக இருவருடனும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு, தமிழில் வெளியான `கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் அதிகாரப்பூர்வ திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுகுறித்து பாராட்டி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, `வாழ்த்துகள், விக்னேஷ் சிவன், நயன்தாரா. இது மிகப் பெரிய செய்தி. படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். உங்கள் இருவருக்கும் பலம் உண்டாகட்டும்!’ என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள `கூழாங்கல்’ படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். `கூழாங்கல்’ படம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வரும் `ரௌடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். `கூழாங்கல்’ படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
குறைந்த பட்ஜெட் செலவில் அற்புதமான சினிமா அனுபவத்தை அளிப்பதாக `கூழாங்கல்’ திரைப்படத்தைப் பார்வையிட்ட திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுகளுக்காக அனுப்பப்பட்ட திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.