விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது
குஷி
சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் குஷி. ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்கியுள்ளார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ் (விஜய தேவரகொண்டா) ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே காதலில் விழும் கதாநாயகன் எப்படியோ கதாநாயகியை காதலில் விழவைக்க, விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.
அதை எதிர்த்து இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் இனிதாகப் போனாலும், போகப்போக இவர்களுக்குள் வரும் சண்டை இல்லற வாழ்வை கசப்பாக்குகிறது. இவர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது? சண்டைக்குப் பின் இவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.
வசூல் சறுக்கல்
ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று முதல் வாரத்தின் நல்ல வசூலை ஈட்டி வந்த குஷி திரைப்படம் தீடிரென்று பாக்ஸ் ஆஃபிசில் சறுக்கியது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளியான முதல் மூன்று நாட்களில் உலகளவில் 70 கோடிகள் வசூல் செய்த குஷி 100 கோடி இலக்கை எட்டும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் வருகையால் வசூலில் அடிவாங்கியது. இந்நிலையில் குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
எங்கு பார்க்கலாம்
குஷி திரைப்படம் வெளியான 10 நாட்களில் அதன் ஓடிடி ரிலீஸ் தெரிய வரும் சூழ்நிலை படத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையே சுட்டிக் காட்டுகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி குஷி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இந்தப் படத்திற்கான ஓடிடி உரிமத்தை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.