‘குஷி’ படத்தின் படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குஷி. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து படக்குழு ஹைதராபாத் திரும்பியது. இந்த நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பின்போது, விபத்து ஏற்பட்டதாக கூறி தெலுங்கு மற்றும் இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அந்த செய்தியின் படி, காஷ்மீரில் உள்ள ஆற்றுப்பாலம் ஒன்றில் ஆக்சன் காட்சி எடுக்கப்பட்டதாகவும், கயிற்றால் இருபக்கமும் கட்டப்பட்ட காரில் சமந்தா, விஜய்தேவரகொண்டா இருந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துவிட்டதாகவும் இதில் சமந்தா, விஜய்தேவரகொண்டாவிற்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள படக்குழு அனைவரும் நலமாக இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருவதாகவும் கூறியுள்ளது.