பாலிவுட்டின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று இயக்குநர் தயாரிப்பாளர் கரன் ஜோஹரின் காஃபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் முன்னனி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள். அந்த வரிசையில் அண்மையில் நடிகர்கள் சமந்தாவும் அக்‌ஷய் குமாரும் பங்கேற்றனர். அதில் சமந்தா பல சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தான் நடிக்க வந்ததன் பின்னணி குறித்துப் பகிர்ந்த அவர் தனது மேற்படிப்புக்கு வீட்டில் யாரிடமும் பணம் இல்லை என்பதால் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்டார்.


நடிப்பு அவரது எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாக இருந்ததா என கரண் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இல்லை. வீட்டில் சூழல் கடினமாக இருந்ததால் எனக்கு வேறு வழியில்லை. மேலும் மேற்படிப்பு படிக்க எங்களிடம் அதிக பணம் இல்லை. அதனால் நடிப்பை தேர்வு செய்தேன். ஆனால் இந்த முடிவின் காரணமாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "இல்லை உங்களுடைய படிப்புக்கான கடனை என்னால் செலுத்த முடியாது" என்று என் தந்தை கூறியது என் வாழ்க்கையை மாற்றியது" என்று அவர் மேலும் கூறினார்.


பணத்துக்காக மட்டும் தான் இதுவரை எந்தப் படமும் செய்ததில்லை என்று சமந்தா மேலும் கூறினார். அவருடன் பங்கேற்ற அக்‌ஷய் கூறுகையில், மல்டி ஸ்டாரர்களில் நடிப்பது குறித்து ஆண் நடிகர்களிடைய ஒருவித பாதுகாப்பின்மை நிலவுவதாகச் சொன்னார். இடைமறித்த சமந்தா பெண் நடிகர்களிடையே அவ்வாறு இல்லை என்றார்.





மேலும், அண்மையில் தான் நடிகர் நயன்தாராவுடன் ஒன்றாக இணைந்து ஒருபடத்தில் நடித்ததாகவும் படத்தின் இறுதி நாளில் தாங்கள் இருவரும் கட்டிப்பிடித்து கண்களில் கண்ணீர் திரள அழுததாகவும் சொன்னார். நயன்தாராவும் சமந்தாவும் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தனர்.