தெலுங்கு, தமிழ் சினிமாக்கள் தொடங்கி பாலிவுட் மற்றும் தற்போதைய வெப் சீரிஸ் உலகம் வரை கடந்த 14 ஆண்டுகளாக டாப் நடிகையாக வலம் வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu).


மயோசிட்டிஸ், மன அழுத்தம்




சென்னை பெண்ணாக சமந்தா, டோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்த கையுடன் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்த நிலையில்,  ரசிகர்கள் யாரும் எதிர்பாராதவிதமாக 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.


அதனைத் தொடர்ந்து கடும் மன அழுத்தத்துக்கு ஆளான சமந்தா, மற்றொருபுறம் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.  இதனிடையே தனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளில் இருந்து வெளிவர ஆன்மீகத் தலங்கள், சுற்றுலாக்கள் என பயணம் மேற்கொண்டு வருவதுடன், கடந்த ஆண்டு முதல் சினிமாவில் இருந்தும் ப்ரேக் எடுத்துள்ளார்.


சினிமாவில் இருந்து ப்ரேக்


இறுதியாக தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் இணைந்து நடித்த சமந்தா, முன்னதாக தனியார் ஊடகத்தின் அட்டைப் படத்துக்காக அளித்த ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஹாலிவுட் நடிகை பாணியில் மிடுக்கான தோற்றத்தில் சமந்தா இருந்த புகைப்படங்கள் இணையத்தில் சென்சேஷன் ஆகின.


இந்நிலையில், தான் நடிப்பிலிருந்து எடுத்துள்ள தற்காலிக ஓய்வு குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். “நான் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்தது நிச்சயம் சிறந்த முடிவு. என்னால் என் திரைப்பணியை நிச்சயம் தொடர்ந்திருக்க முடியாது. என் மோசமான உடல்நிலையுடன் பணி அழுத்தமும் எனக்கு சேர்ந்தது. அதை என்னால் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை.


13 வருஷமா தொடர்ந்து உழைக்கிறேன்



நான் மீண்டு வர எனக்கு நானே நேரம் ஒதுக்கியதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நான் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வருகிறேன். நான் என்னைப் பற்றிய சுய வெறுப்பையும்,  குறைவான தன்னம்பிக்கையையும் கொண்டிருந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு மனிதராக வளர முயற்சித்தேன்.


அந்த வளர்ச்சியுடன் எனது பாதுகாப்பின்மை, சுய வெறுப்பு ஆகியவை பற்றி எனக்கு ஆழமான புரிதல் வந்தது. நான் அவற்றைக் கண்டறிந்ததன் மூலம் அவற்றை என்னால் குணப்படுத்த முடிந்தது” எனப் பேசியுள்ளார் சமந்தா.


பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள சிட்டாடெல் தொடரின் இந்தியப் பதிப்பு இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமந்தா விரைவில் உடல்நலன் தேறி சினிமாவில் டாப் நடிகையாக மீண்டும் வலம் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.