இயக்குநர் விக்ரமன், நடிகர் கார்த்திக்கிடம் தான் சவால் விட்ட கதையை நேர்காணல் ஒன்றில் தெரிவித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் குடும்ப படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். இவர் இயக்கிய அத்தனை படங்களும் 100 நாட்கள் ஓடியவை. நட்பு, காதல், குடும்ப பாசம் என அனைத்தையும் கலந்து கட்டி ரசிகர்களை கட்டிப்போடுவதில் கைதேர்ந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தை இயக்கினார். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் கார்த்திக் மற்றும் ரோஜா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர்.

மேலும் நடிகர் அஜித் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல்  ரமேஷ் கண்ணா , மௌலி , சத்யப்ரியா , பாத்திமா பாபு மற்றும் மதன் பாப் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்தார்கள். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இப்படம் கார்த்திக்கின் 100வது படமாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.250 நாட்களுக்கு மேல் ஓடிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் தெலுங்கில் ராஜா என்ற பெயரிலும், கன்னடத்தில் கனசுகரா எனவும், பெங்காலியில் ஷகல் சந்தியா என்றும், ஒடியாவில் மோ துனியா து ஹி து என்றும்  ரீமேக் செய்யப்பட்டது.

Continues below advertisement

இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிகர் கார்த்திக் நடிக்க மறுத்த கதையை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விக்ரமன் தெரிவித்திருந்தார். அதில், “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் முதல் 3 நாட்கள் கார்த்திக் சார் நடிச்சாரு. படத்தின் ஷூட்டிங் வாகினி ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. 4வது நாள் அவர் தயாரிப்பாளரை அழைத்து, எனக்கு இந்த கதை அவ்வளவாக பிடிக்கவில்லை. இது நான் நடிச்ச நந்தவன தேரு படத்தின் கதை மாதிரியே இருக்கிறது என சொல்லி ஏதோ ஒரு குழப்பம் பண்ணுகிறார். ஷூட் போய் கொண்டிருக்கும்போது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து என்னிடம் சொல்கிறார்கள். 

அன்றைக்கு அவர் நடித்து விட்டு மேக்கப் ரூமில் அமர்ந்து இருந்தார். நான் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து பார்க்கிறேன் என சொல்லி விட்டு நேராக அங்கே சென்றேன். என்ன சார் பிரச்சினை என கார்த்திக்கிடம் கேட்டேன். எனக்கென்னமோ இந்த கதை நந்தவன தேரு படம் மாதிரி இருக்கு. அதிலும் நான் ஹீரோயினை பாடகியாக்குவேன். அந்த மாதிரி இருப்பதாக அவர் சொன்னார். 

உடனே நான், சார் அது வேறு, இது வேறு. இது பாடகியாக்குவது எல்லாம் கதையல்ல. பாடகியாகி முன்னுக்கு வந்த ஒருவர் நான் இவனாலதான் முன்னுக்கு வந்தேன்னு நன்றி சொல்லுகிற ஒரு கதை. நீங்க சொல்லுற நந்தவன தேரு படத்துக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நடிங்க. இல்லாவிட்டால் இந்த தயாரிப்பாளர் உங்களை வைத்து வேறு படம் எடுத்துக் கொள்ளட்டும். நான் வேறு ஒரு ஹீரோவை வைத்து இந்த படத்தை 100 நாட்கள் ஓட வைக்கிறேன் என சொல்லி சவால் விட்டேன். அதற்கு கார்த்திக், நீங்கள் இவ்வளவு நம்பிக்கையா இருந்தா நான் நடிக்கிறேன் என சொன்னார்” என விக்ரமன் கூறியுள்ளார்.