தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தான், மயோசிடிஸ் எனும் நோயால் தான் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமந்தா அறிவித்தார். ஆனால், நோயால் சலைத்து போகாத சமந்தா,மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளுடன், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக தொடர்ந்து கோலோச்சி வருகிறார். பல முன்னணி நாயகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
சமந்தா மீதான விமர்சனம்:
அந்த வகையில், அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சமந்தா கலந்து கொண்டார். அப்போது சமந்தாவை பார்த்த பலரும், ரோய் பாதிப்பால் அவர் தளர்ந்து போய் விட்டார். அவர் தனது அழகையும் பளபளப்பையும் இழந்துள்ளார். விவாகரத்திலிருந்து அவர் வலுவாக மீண்டு கொண்டு இருக்கிறார், அவரது தொழில் வாழ்க்கை உயரத்தில் உள்ளது என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கும் போது மயோசிடிஸ் நோய் பாதிப்பால் சமந்தா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் பலவீனமாகியுள்ளார் என பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கின.
விளக்கமளித்த சமந்தா:
இதற்கு பதில் அளித்து இருந்த சமந்தா, ”நான் செய்ததைப் போல நீங்கள் பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுக்க வேண்டாம் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உங்கள் பிரகாசத்தை அதிகரிக்க என்னிடமிருந்து கொஞ்சம் அன்பு இருக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார்.
சமந்தாவின் நச் பதிலடி:
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் மோசமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னால் முடியும் என்றால், உங்களாலும் முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தை, அவரது பயிற்சியாளர் ஜுனைத் என்பவர் எடுத்துள்ளார்.
சாகுந்தலம் திரைப்படம்:
இதனிடையே, ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சமந்தா. ’சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்து கவனமீர்த்த தேவ் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநரான குணசேகரன் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்.17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.