தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டர். கருத்து வேறுபாடு காரணமாக சமந்தாவும் சைத்தன்யாவும் மணமுறிவு குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். இவர்களின் விவாகரத்திற்கு சமந்தாதான் காரணம் என செய்திகள் வெளியாகின. இது முறையல்ல என சமந்தா முன்னதாகவே விளக்கம் ஒன்றையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனாலும் தொடர்ந்து சமந்தா குறித்து சில சேனல்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.







இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அந்த சேனல்களின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் சுமன் டிவி, தெலுங்கு பாப்புலர் டிவி உள்ளிட்ட இன்னும் சில யூடியூப் சேனல்கள், சில யூடியூப் நிறுவனங்கள் மீது அவர் மானநஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளார்.மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும் அவருக்கு ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருந்ததாக மிகவும்  தவறாக பேசியதாக கூறி அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளாராம். முன்னதாக சமந்தா வெளியிட்ட அறிவிப்பில் அதில் ''எனக்கு எதிரான வதந்திகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான உங்களின் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்கிறது. என் மீது பல வதந்திகள் பரபப்படுகின்றன. நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். விவாகரத்து என்பதே வேதனையான ஒன்றுதான். தனி ஆளாக அந்தக் காயத்திலிருந்து மீள எனக்கு நேரம் எடுக்கும். இதற்கிடையே என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என குறிப்பிட்டிருந்தார். 


 






அதே போல சமந்தாவின் ஸ்டைலிஸ்ட்  ஒருவர்தான் சமந்தா - சைதன்யா விவாகரத்திற்கு முக்கிய காரணம் என சில யூட்யூப் சேனல்கள் செய்தி பரப்பி வந்தன. இது குறித்து விளக்கமளித்த ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகல்கார் “சமந்தா என் சகோதரியைப் போல. சமந்தா - நாகசைதன்யாவுக்கு நெருக்கமானவர்களுக்கு எங்களது உறவைப் பற்றி தெரியும். நாக சைதன்யாவுக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழலில், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு நான் காரணம் என சில மீடியாக்கள் சொல்லி வருவது வருத்தம் அளிக்கிறது. சமந்தா - நாக சைதன்யாவின் ரசிகர்கள் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இடைவெளி இல்லாமல் எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றது. இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளேன். எனினும், சகோதரி சமந்தாவுக்காக இந்த டிரால், மீம்ஸ், மிரட்டல்களை சமாளித்து கடந்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார். இப்படியான தொடர் செய்திகள் வெளியான நிலையில்தான் சமந்தா தற்போது சட்ட உதவியை நாடியுள்ளார்.