தெலுங்கு தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சமந்தா மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு குறித்தும், தன் உடல்நிலை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தது குறித்தும் மனமுடைந்து பேசியுள்ளார்.
நடிகை சமந்தா மையக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரி ஹரிஷ் இயக்கியுள்ள திரைப்படம் யசோதா. பான் இந்தியா படமாக இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
வரும் நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முன்னதாக தெலுங்கு தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சமந்தா, தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், தன் உடல்நிலை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தது குறித்தும் மனமுடைந்து பேசியுள்ளார்.
தெலுங்கின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினி சுமாவுக்கு அளித்த பேட்டியில் “சில நாள்கள் நல்லபடியாக இருக்கும், சில நாள்கள் மோசமானவையாக இருக்கும். சில நாள்கள் படுக்கையில் இருந்து எழுவதே கடினமாக இருக்கும், சில நாள்கள் போராட வேண்டும் என்று நினைப்பேன். மெல்ல மெல்ல நான் போராட விரும்பும் நாள்கள், நான் பலவீனமாக நினைக்கும் நாட்களை விட அதிகமாகித்தான் வருகிறது” எனத் தெரிவித்தார்.
சமந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து மனமுடைந்து பேசிய சமந்தா, "இப்போது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நான் விரைவில் இறக்கப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக நிறைய கட்டுரைகளைப் பார்த்தேன். ஆம் இதிலிருந்து குணமாக நேரம் எடுக்கும். நான் சோர்வாக உணர்கிறேன் ஆனால் போராடியே வந்திருக்கிறேன், இதனை எதிர்த்து போராடப் போகிறேன். நான் இவ்வளவு தூரம் போராடி வந்திருக்கேனான்னு தோணுது. ஆனா நான் போராடிதான் ஆகணும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்கள் மிகவும் இருண்ட காலமாக இருந்ததாகக் கூறியுள்ள சமந்தா, தான் அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதாகவும், மருத்துவர்களை தொடர்ந்து அணுகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கையில எல்லாவற்றையும் குறித்து நான் பேசியே வந்திருக்கிறேன். நான் நாகரீகமான உடைகள், அசாதாரணமான போட்டோஷூட் செய்த வாழ்க்கைமுறையை காண்பித்திருக்கும் நிலையில், இந்த க்ளாமர் அல்லாத பக்கத்தையும் காண்பிக்க நினைத்தேன். அனைவருக்கும் நல்ல காலம், மோசமான நேரங்கள் வரும் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி, பிரபலமாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் மோசமான நேரங்கள் இருக்கும். அதை அனைவரும் அறிவது முக்கியம் ," எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தில் சமந்தாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக சமந்தா இப்படத்துக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி நடித்தார் எனத் தயாரிப்பாளர் நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது கவனத்தை ஈர்த்தது. மேலும் பெரிய பட்ஜெட்டில் 100 நாள்களில் படப்பிடிப்பை முடித்ததாகவும், தமிழிலும் தெலுங்கிலும் சமந்தாவே படத்துக்கு டப்பிங் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.