காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகை சமந்தாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் விபத்து நடந்துள்ளது.


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டுள்ளது.


அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்ட நிலையில் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இப்படத்தில், விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். 'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். 'குஷி' உற்சாகமான, வண்ணமயமான காதல் கதையாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், காஷ்மீரின் பாஹல்கம் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


பைக் காட்சியின்போது விபத்து.. 


குஷி படத்திற்காக பைக் ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது. அங்குள்ள லிட்டர் ஆற்றின் பகுதியில் இருபுறமும் கயிறு கட்டி அதன் குறுக்கே சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டோ ஆகியோர் பைக்கில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் பைக் ஸ்கிட்டாகி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இருவருமே நீரில் தவறி விழுந்துள்ளனர். படப்பிடிப்பு தளமே பதறிப்போய் அவர்களை மீட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.


பெரிய அளவில் காயங்கள் இல்லாத காரணத்தால் அடுத்தநாள் ஸ்ரீநகரின் டால் ஏரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் முதுகில் கடுமையான வலி இருப்பதாகக் கூறினர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் விடுதிக்கு திரும்பினர். உடனடியாக தேர்ந்த பிசியோதெரபிஸ்ட்டுகள் வரவழைக்கப்பட்டு சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.




பின்னர் எஞ்சியிருந்த காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டது. தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் இருந்து திரும்பியுள்ளனர்.


தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் குஷி திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாநடிகை படத்தை தொடர்ந்து சமந்தா - விஜய் தேவரகொண்டா இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால் இப்படம் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.