நடிகை சமந்தா மாணவர் ஒருவரின் தற்கொலையை சுட்டிக் காட்டி தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். அந்த மாணவர் தனது பாலின வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் மனம் நொந்து தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் டெல்லி பப்ளிக் பள்ளியில் தான் நடந்துள்ளது.


இது குறித்துப் பேசியுள்ள சமந்தா, இந்த உலகத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும்போது நாம் ஏன் அன்பானவர்களாக இருக்கக் கூடாது என்று சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் ரீபெர்த் என்ற பாடலையும் பகிர்ந்துள்ளார்.


இந்த உலகில் அன்பானவர்களின் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்று சமந்தா வினவியுள்ளார். வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா என்று தெரிவதில்லை. வெளியே சிரிக்கும் அவர்கள் உள்ளே அழுது கொண்டிருக்கலாம். அந்த அன்பானவர்களுக்கு வாழ்க்கை கடினமானதாக இருக்கலாம். ஒருத்தர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அவர்களின் கவலைகள் யாருக்குமே தெரிவதில்லை. நமது பிறப்பிடம் பூமி, நமது இனம் மனித இனம், நமது மதம் அன்பு, நமது அரசியல் சுதந்திரம் என்ற கருத்தையும் சமந்தா பகிர்ந்துள்ளார். இதை நாம் எப்போதுமே மறந்துவிடக் கூடாது. இதை உங்களுக்கும் எனக்குமாக நான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


அண்மையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை நிறுத்த வேண்டும் என்றும் சமந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா அவரது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் அதிகமாக ட்ரால் செய்யப்பட்டார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மிக மோசமான விமர்சனங்கள் கூட எழுந்தன. அவருடைய ஒழுக்கம் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு செலிப்ரிட்டி என்பதாலேயே அவருடைய வாழ்வில் நடந்த தனிப்பட்ட விஷயத்திற்கு அவர் ட்ரோல்கள் என்ற பெயரில் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.


இப்போது சமந்தா டெல்லி மாணவரின் தற்கொலையை ஒட்டி சொல்லவந்திருக்கும் கருத்தும் யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் மூக்கை நுழைக்காதீர்கள் என்பதுதான். அதேபோல் சிர்ப்புகளுக்குப் பின்னால் எல்லாம் மகிழ்ச்சி மட்டுமே இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது என்ற அவரது கருத்து தத்துவார்த்தமானது.


நாம் நம் வாழ்வில் நம்முடன் பயணிக்கும் உறவுகள், நட்புகள், சக ஊழியர்களின் சிர்ப்பு உண்மையிலேயே சிரிப்பு தானா என்பதைக் கூட உணர்வதில்லை. ஒவ்வொருக்குள்ளும் வேதனை இருக்கிறதா என்று அறிந்து அன்போடு பழகினாலே போதும் காயங்கள் ஆறிவிடும் அல்லவா?


இதை வைத்துதான் சமந்தா,  இந்த உலகத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும் போது நாம் ஏன் அன்பானவர்களாக இருக்கக் கூடாது என்று வினவியுள்ளார்.