Samantha - Jwala Gutta: தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு திடீரென மயோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு முறையான தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உடல்  நலம் தேறி வந்தார். மீண்டும் நடிப்புக்கு ஒரு பிரேக் விட்டு தனது உடல் ஆரோக்கியம் மற்றும் பிட்னெஸ் மீது கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக தனது உடல் ஆரோக்கியம் குறித்து பாட்காஸ்ட் சேனல் மூலம் பல மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். 

 

அந்த வகையில் நைட்ரஜன் பெராக்ஸைடு குறித்து சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்ட தகவல் ஒன்றுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைசேஷன் என்ற சிகிச்சை முறை பற்றி தன் பதிவில் சமந்தா குறிப்பிட்டு இருந்தார். அப்படி செய்வது ஆபத்தானது என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் சமந்தாவிவை லிவர் டாக்டர் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வலம் வரும் பிரபல கல்லீரல் நிபுணரான மருத்துவர் ஒருவர் கடுமையாக சாடி பதிவிட்டார். சமந்தா பரிந்துரைத்த முறையற்ற மாற்று மருத்துவ குறிப்புக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா தன் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளார். தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் வலுவான கேள்வி ஒன்றை சமந்தாவுக்கு எதிராக முன்வைத்துள்ளார் ஜுவாலா கட்டா.

“தன்னை பின்தொடரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் பிரபலத்திடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கவிரும்புகிறேன்... உதவி செய்வதே உங்கள் நோக்கம் எனப் புரிகிறது. ஆனால், ஒரு வேளை, நீங்கள் சொல்லும் சிகிச்சை உயிரிழப்பை ஏற்படுத்தினால் நீங்கள் அதற்கு பொறுப்பேற்பீர்களா? நீங்கள் உங்கள் பதிவில் டேக் செய்துள்ள மருத்துவரும் இதற்கு பொறுப்பை ஏற்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

ஏற்கெனவே கல்லீரல் நிபுணரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பிலிப்ஸ், நடிகை சமந்தாவை ஆரோக்கியம் பற்றிய மருத்துவ அறிவற்றவர் என கடுமையாக சாடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சமூகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் சமந்தாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து இருந்தார். 

மருத்துவர் ஃபிலிப்ஸின் விமர்சனத்துக்கு நடிகை சமந்தா நீண்ட விளக்கம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், சமந்தாவின் இந்த பதிவுக்கு பதில் அளித்த மருத்துவர் 'மக்களின் உடல்நலத்தை பற்றி அக்கறை இல்லாத பிரபலங்கள் மக்களிடம் தவறான கருத்துகளை பகிர்கிறார்கள். இது தவறு என அவர் உணர்ந்து இருந்தால் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கலாம்" என மீண்டும் கடுமையாக சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.