தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு தேசம் சென்று கோலோச்சி அங்கு முக்கிய நடிகையாக உருவெடுத்தவர் நடிகை சமந்தா. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பான ’ஏ மாயா சேசாவே’ படத்தின் மூலம் டோலிவுட்டில் நடிகர் நாகசைதன்யாவுடன் 2010ஆம் ஆண்டு அறிமுகமானார் சமந்தா.


கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அறிமுகமான சமந்தா தன் முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பைப் பெற்று, டோலிவுட் ரசிகர்களின் டார்லிங்காக மாறினார்.


தொடர்ந்து கோலிவுட்டிலும் அதே ஆண்டு அறிமுகமாகி சமந்தா நடித்து வந்தாலும் ஆந்திர ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர்.


மேலும், தெலுங்கிலும் தமிழிலும் டாப் ஸ்டார்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்த சமந்தா, நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ‘நித்யா’ கதாபாத்திரத்தால் தனி ரசிகர் படையையே திரட்டினார்.


தொடர்ந்து நடிகர் நாகசைதன்யாவுடன் காதலில் விழுந்து கடந்த 2017ஆம் ஆண்டு டோலிவுட் மருமகளாகவும் சமந்தா உருவெடுத்த நிலையில் அவரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.


ஆனால் 4 ஆண்டுளுக்குப் பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில் மன அழுத்தம், மயோசிட்டிஸ் பாதிப்பு என உடல், மன உளைச்சல்களைக் கடந்து சமந்தா தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், சமந்தாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வரும் தகவல் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
  
ஆந்திரப் பிரதேசத்தில் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்தக் கோயிலின் திறப்பு விழா நாளை (ஏப்.28) நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசம், குண்டூர் அருகே உள்ள பாப்ட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தைச் சேர்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். 


இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள சந்தீப், சமந்தா தன் பிரதியுக்‌ஷா அறக்கட்டளை மூலம் கோயில் கட்டி வருவதால் அவர் மீது மரியாதை கூடி தான் சமந்தாவுக்கு கோயில் கட்டத் தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார். நாளை சமந்தா தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் இந்த சிலை அவரது பிறந்தநாளை முன்னிட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.


 






தமிழ் சினிமாவில் முதன்முதலாக கோயில் கட்டப்பட்டு கொண்டாடித் தீர்க்கப்பட்ட நடிகை குஷ்பு. அவரைத் தொடர்ந்து நடிகைகள் நமீதா, நயன்தாரா, ஹன்சிகா, ஹனிரோஸ் உள்ளிட்ட பலருக்கும் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது சமந்தாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.