சமந்தா கதாநாயகியாக அறிமுகமாக இருந்த மாஸ்கோவின் காவேரி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றன.
நாயகியாக சமந்தா
பிரபல ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் மாஸ்கோவின் காவேரி. தனது கதைக்கு ஏற்ற ஒரு அறிமுக நடிகையை தேடிக் கொண்டிருந்தார் ரவிவர்மன். அப்போது மாடலிங் செய்துகொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில் இவர்தான் தனது படத்தின் கதாநாயகி என அவர் முடிவு செய்தார். அந்த பெண் தான் இன்று கோலிவுட், டோலிவுட் க்யூட் குயினாக வலம் வரும் சமந்தா.
மாஸ்கோவின் காவேரி
2007ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு காரணங்களால் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் தாமதத்திற்கு பின் 2010 ஆம் ஆண்டு வெளியானது மாஸ்கோவின் காவிரி. கதாநாயகியாக சமந்தா அறிமுகமாக வேண்டிய படம் என்றாலும், இந்த இடைவெளியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாபாத்திரம், இதே படத்தின் தெலுங்கு பதிப்பான ஏ மாயா சேஸாவே படத்தில் கதாநாயகி என அறிமுகமாகி இருந்தார்.
மேலும் தமிழில் ‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாகவும் சமந்தா அறிமுகமாகி விட்டிருந்தார். இந்த இரண்டு படங்களின் வழியாக ரசிகர்கள் மனதில் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். இதற்கு பின் வெளியான மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் நடிகர் ராகுல் ரவீந்திரன் உடன் நடித்திருந்தார் சமந்தா.
ஆனால் இப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. எனினும் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியான சமந்தாவை இந்தப் படத்தின் தோல்வி பெரியளவில் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எது எப்படியோ மாஸ்கோவின் காவேரி படத்தில் எல்லாருக்கும் பிடித்து ஒரு விஷயம் இருக்கிறது.
கோ ரே கோக்கோ ரே...
இந்தப் படத்தில் தமன் இசையமைத்த பாடலான ‘கோ ரே கோக்கோ ரே’ என்கிற பாடல் ரசிகர்களை கவர்ந்தது. வைரமுத்து வரிகள், சுச்சி, கார்த்திக்கின் கிறங்கடிக்கும் குரல்கள் என இப்பாடல் இப்போது கேட்டாலும் காதல் பட்டர்ஃப்ளைகளை பறக்கவிடும். பரபரப்பு, உற்சாகம், காதலின் புதுமை போன்ற கலவையான உணர்வுகள் கொண்ட இந்தப் பாடல் இன்று வரை ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் டாப் பாடலாக இருந்து வருகிறது.
குஷி
தற்போது சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள குஷி படத்தின் ரிலீசுக்காக காத்துள்ளார். குஷி படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்க, சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, லக்ஷ்மி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குஷி திரைப்படம்.