கோலிவுட், டோலிவுட் என இருமொழி படங்களிலும் அசத்தி வரும் நடிகைகளுள் சமந்தா முதன்மையானவர். அவர் நடிப்பில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு தெலுங்கு படங்களிலும் முக்கியத்துவம் வழங்கப்படும். இப்படி டாப் ஹீரோயின்ஸ் பட்டியலில் இடம்பிடித்த சமந்தா, திடீரென புஷ்பா படத்தில் ஐட்டம் டான்ஸில் ஆட இருப்பதாக செய்திகள் வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது வதந்தியாகத்தான் இருக்கும் என சில சமூக வலைத்தளங்களில் முனு முனுத்த நிலையில் தயாரிப்பு நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.






அந்த அறிவிப்பில் “புஷ்பா படத்தின் 5 வது பாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்காக சிறப்புமிக்க ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டார்கள். இது குறித்து திறமைமிக்க சமந்தாகாருவிடம் கோரிக்கையாக கேட்டோம். அவரும் ஒப்புக்கொண்டார்.” என தெரிவித்திருந்தன. அதன் படி சமந்தா ஐடம் நம்பர் பாடலில் அல்லு அர்ஜுனுடன் நடனமாடுவது உறுதியானது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் அந்த ஒரு பாடலில் சம்ந்தா நடனமாடுவதற்கு கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்தான் சமந்தா தனது படங்களின் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியதாக செய்திகளை பார்த்தோம். இந்நிலையில் ஒரு பாடலுக்கு 1.5 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பது பலரை திகைக்க செய்திருக்கிறது.கிட்டத்தட்ட முந்தைய படங்களுக்கு சமந்தா வாங்கிய சம்பளங்களுக்கு இணையாக, ஒரு பாடலுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்திருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், சில நம்பத்தகுந்த வட்டாரங்களின் வாயிலாக இந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. 





இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. மிகப்பெரிய பட்ஜெட்டில்  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ’புஷ்பா’ படத்தை தயாரித்து வருகிறது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளனர். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு  இந்த ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறையின் பொழுது படம் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை கொடுத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது படக்குழு. படத்தில் சில பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என  ஐந்து மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.