'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். சமீபத்தில் இவர் இயக்கி முடித்திருக்கும் படம் 'சாணிக்காயிதம்'. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் நடிகராக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளதால் சாணிக்காயிதம் படத்திற்கு ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 80களில் நடப்பது போன்ற கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிக்கட்ட பணிகளுக்குப் பிறகு விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
இப்படத்துக்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரது பெயரும் ஆரம்பத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றது.
இந்நிலையில் 'சாணிக்காயிதம்' படத்தில் தற்போது இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக பிரத்யேகமாக ஒரு போஸ்டரை வெளியிட்டு ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..!” என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் யுவன் ஷங்கர் ராஜா எதற்காக படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்