சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் தலைதூக்கியிருப்பதாகவே பேசப்பட்டு வருகிறது. நடிகர்களின் வாரிசுகளால் திறமையான நடிகர்கள் முதல் டெக்னீசியன்கள் வரை வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்தை மறைமுகமாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தாக்கி பேசியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது. தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிருத். இப்படத்தை தொடர்ந்து அவர் விஜய், அஜித், கமல், ரஜினி படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். 

ரஜினியின் உறவினர் என்பதால் அனிருத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக பலரும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவரது இசைதான் சிறந்தது போன்ற பிம்பத்தை கட்டமைத்து வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலில் நீயா நானா கோபிநாத் இசையமைப்பாளர்கள் ஷான் ரோல்டன், ஜி.வி.பிரகாஷ் குமார், சாம் சிஎஸ் ஆகியோர் தமிழ் படங்களில் வரும் இசை குறித்து உரையாடினார்கள். 

அப்போது பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தற்போது வெளியாகும் படங்களில் முன்பு போன்று பாடல்கள் இல்லை, அதிக சத்தம் தான் இருக்கிறது. குறிப்பாக பெரிய ஹீரோக்கள் பெரிய பட்ஜெட் என்று வரும்போது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, ஒரு பாட்டை ஹிட்டாக்குவதற்காக மட்டுமே இசையமைக்கிறார்கள். அதுவும் அந்த பாடல் ஒரு நிமிட ரீல்ஸ் வீடியோவுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது. டிரெண்டிங்கிற்காக பாட்டு வருகிறதே தவிர படத்திற்காக வரவில்லை. சமீபத்தில் அதுபோன்ற படங்கள், அந்த மாதிரி பாடல்கள் தான் அதிகம் வருகிறது. ஒரு முன்னணி ஹீரோ படம் என்றால் அவர் வந்தாலே தீ பறக்குற மாதிரி பின்னணி இசையை வைத்து படத்தை முடித்து விடுகிறார்கள். 

இந்த மாதிரி படங்களை பார்க்கும் இயக்குநர்கள் தன்னிடம் வரும்போது அதேபோன்று இசையும், சம்பந்தம் இல்லாத பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் என முறையிடுவது பார்க்கும் போது கவலையாக இருக்கிறது என சாம் சி.எஸ் தெரிவித்தார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். முன்னதாக சாய் அபயங்கர் நல்ல திறமையான பையன் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்தது பேசுபொருளானது. தற்போது அதேபோன்று தற்போது திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் கூலி படத்தை தாக்கி பேசியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது. 

அப்படத்தின் பெயரையும், இசையமைப்பாளரைின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் சாம் சி.எஸ். அந்த வீடியோவை காணும் போது கூலி படத்தில் வரும் மாேனிகா பாடல் மற்றும் படத்தையும் மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது தெரிகிறது. அதுவும் அனிருத்தை வார்த்தைகளால் கடுமையாக சாடி பேசியிருப்பதும் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் சாம் சி.எஸ் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் இப்படி பேசுகிறார் என்றும் கமாண்ட் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சாம் சிஎஸ் கூறுவது உண்மைதான் அனிருத் போடுவது இசையே இல்லை, ஒரு ஐட்டம் பாடல் அப்புறம் ரஜினிகாந்திற்கு பின்னணி இசை இதை வைத்து தப்பித்து விடுகிறார். படத்தில் பெரிதாக பின்னணி இசை இல்லை என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.