'பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு திருமணம்..' இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அவ்வப்போது அவருக்கும் முன்னணி நடிகைகளில் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு திருமணம் என்றும் தகவல்கள் வெளியாவது வழக்கமே. இந்த முறை ஒருபடி மேலே போய், ஒரு தகவல் ட்விட்டரில் பரவியுள்ளது. ட்விட்டரில் வெளியான ஒரு தகவலில், சல்மான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது அவருக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். மனைவியும் மகளும் துபாயில் வசிக்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.


இது பல ஊடகங்களிலும் பரவியது. இந்நிலையில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு அவர், எனக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும் மகள் இருப்பதாகவும் இருவரும் துபாயில் இருப்பதாகவும் வெளியான செய்தி உண்மையல்ல. நான் எனது ஒன்பதாவது வயதில் இருந்தே கேலக்ஸி குடியிருப்பில் தான் இருக்கிறேன். இது எல்லோருக்கும் தெரிந்து விஷயம் என்று கூறி வழக்கம்போல் பொய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


சகோதரர் நிகழ்ச்சியில் வெளியான உண்மை


சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான். இவர், 'குயிக் ஹீல் பின்ச் பை அர்பாஸ் கான்' என்கிற நிகழ்ச்சியை ஒரு யூடியூப் சேனலுக்காகத் தொகுத்து வழங்குகிறார். சைபர் புல்லியிங், அதாவது, இணையத்தில் மற்றவர்களை அவதூறு பேசி துன்புறுத்துபவர்கள் குறித்தும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இதன் முதல் சீஸன் வெளியானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இரண்டாவது சீஸன் முதல் பகுதியுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்துகொண்டார். 
இணையத்தில், சல்மான் கான் குறித்து அவதூறாகப் பதிவிடப்பட்டுள்ள கருத்து ஒன்றை சுட்டிக்காட்டி அர்பாஸ் கான் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தான் சல்மான் கான் பதிலளித்துள்ளார்.


சல்மானும் பாலிவுட் மான்களும்..


இந்த மான்.. எந்தன் சொந்த மான்... என்று ரியலிலும் சல்மான் டூயட் பாடிய ஹீரோயின்கள் ஏராளம். சல்மான் கானுடன் காதலில் இருந்தவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடிப்பவர் சங்கீதா பிஜ்லானி. சங்கீதாவை தான் சல்மான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின். அப்புறம் பிரேக் அப் என்றும் பேசப்பட்டது.
அந்தக் கதை முடிந்து போக அவர் சோமி அலி பெயர் சலசலக்கப்பட்டது. அது குறுகிய காலம். அப்புறம், உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ட்ரி கொடுத்தார். இது கிட்டத்தட்ட திருமணத்தில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. பின்னர் சினேகா உல்லலுடன் ஒரு காதல். அதன் பின்னர் நீண்ட கால கதையாக கத்ரீனா கைஃபுடனான உறவு நீடித்தது. இவர்களைத் தவிர ப்ரீத்தி ஜிந்தா, ஜரீன் கான், டைசி ஷா, லூலியா வந்தூர், அசின் ஆகியோருடனும் சல்மான் கானின் பெயர் அடிபட்டது அனைவருக்கும் தெரிந்ததே.