நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 2  பேரை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கானின் வீடு பாந்த்ரா வெஸ்டில் உள்ளது. இந்த வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. குண்டு சத்தம் கேட்டு வெளியே வந்து வீட்டு காவலர்கள் பார்த்தபோது யாரையும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது. 






இந்த துப்பாக்கி சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாலிவுட் திரை பிரபலங்கள் சல்மான் கானை தொடர்பு கொண்டு பேசினர்.ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சல்மான் கானுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 






பைக்கில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அடையாளம் காணுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் மும்பை அழைத்து வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கான காரணம் தெரிய வரும். 


விக்கி சஹாப் குப்தா என்ற 24 வயதுள்ள நபரும், சிரிஜோகேந்திரா பால் என்ற 21 வயதுள்ள நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்கள். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க: