அடுத்தடுத்து வந்த கொலை மிரட்டல் காரணமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், புதிய விலையுயர்ந்த புல்லட் ஃப்ரூப் காரை வாங்கியுள்ளார். அதன்படி, நிஸ்ஸான் எஸ்யுவி மாடலை சேர்ந்த வெள்ளை நிற காரை அவர் தனதாக்கியுள்ளார். அண்மையில் சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கோரிய நிலையில், தற்போது சல்மான் கான் புல்லட் ஃப்ரூப் காரை வாங்கியுள்ளார்.
ஒய்-பிளஸ் பாதுகாப்பு:
பல்வேறு தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் காரணமாக, பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை மட்டும் நம்பிடாத சல்மான் கான், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மேற்கொள்ளும் பயணங்களுக்காக இந்தியாவில் இதுவரை வெளியிடப்படாத நிசான் பாட்ரோல் எஸ்யூவி காரை இறக்குமதி செய்துள்ளார். ஏற்கனவே, கவசம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடி கொண்ட கஸ்டமைஸ்ட் டொயோட்டா லேண்ட் குரூஸர் காரை வாங்கிய நிலையில், அதன் மேம்பட்ட வடிவமாக தான் தற்போது நிசான் பாட்ரோல் எஸ்யூவியை வாங்கியுள்ளார்.
காரணம் என்ன?
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சல்மான் கானுக்கும், அவரது நோய்வாய்ப்பட்ட தந்தைக்கும் மற்றும் பிரபல பாலிவுட் எழுத்தாளர் சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்த பல்வேறு கொலை மிரட்டல்கள் காரணமாக தான் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய லாரன்ஸ் பிஷ்னோய், தனது வாழ்க்கையின் லட்சியமே சல்மானை கொல்வது தான் என மீண்டும் அறிவித்தார்.
சல்மான் கானின் அடுத்த திரைப்படம்:
சல்மான் கானின் நடிப்பில் அடுத்ததாக ”கிஸ்ஸி கா பாய், கிஸ்ஸி கா ஜான்” திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அதைதொடர்ந்து, டைகர் 3 திரைப்படத்திலும், ஷாருக்கான் உடன் சேர்ந்து நடிக்க உள்ள டைகர் vs பதான் திரைப்படத்திலும் சல்மான் கான் நடிக்க உள்ளார். அண்மையில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற பதான் திரைப்படத்திலும் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சல்மான் சொன்ன கருத்து:
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான், OTT தளங்களில் இடம்பெறும் மோசமான ஆபாச தன்மை மற்றும் அதிக திரைப்பட தயாரிப்பு செலவுகள் பற்றி தனது கருத்தை தெரிவித்தார். அதன்படி, ”ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக தயாரிக்கப்படும் உள்ளடக்கங்கள் நல்லதாக இல்லை. தற்போது சில கட்டுப்பாடுகளுடன், விஷயங்கள் சிறப்பாக உள்ளன, ஆனால் முன்பு, எந்த தணிக்கையும் இல்லை, இதனால் ஆபாசமும், மோசமான மொழியும் மற்றும் வன்முறையும் அதிகரித்து இருந்தன” என கவலை தெரிவித்து இருந்தார்.