Salaar Update: பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


பிரபாஸ் பிறந்தநாள்:


பாகுபலி படம் மூலம் இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகராக உருவெடுத்தார் பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது சலார் மற்றும் கல்கி என்ற பிரமம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


சலார் போஸ்டர் வெளியீடு:  


இந்நிலையில் பிரபாஸின் பிறந்தநாளையொட்டி சலார் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொஞ்சம் சத்தம் போட்டு டைனோசருக்கு வழி வகுப்போம்! இந்த பிறந்தநாளில், எங்கள் ரெபெல் ஸ்டார் பிரபாஸை வாழ்த்துகிறோம் என குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபடுவது போன்ற 4 லுக்குகளில் பிரபாஸின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.






பெரும் எதிர்பார்ப்பில் சலார்:


கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரசாந்த் நீல் இயக்கத்தில்  தான் சலார் படம் உருவாகி வருகிறது. யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் கவனத்தை ஈர்த்த நிலையில், இரண்டாவது பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் வாரிக்குவித்தது. இதனால், அந்த இயக்குனரின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் சலார் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாக உள்ளது.


பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் நடப்பாண்டு வெளியாகும் நிலையில், இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.  ஹொம்பாலே நிறுவனத்தால் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தில் ரிலீஸ், டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.