பிரபாஸ்


2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஈஸ்வர் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் பிரபாஸ்.  2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப் பட்ட நடிகராக உருவானார். இதனைத் தொடர்ந்து சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி உள்ளிட்டப் படங்களில் கதாநாயகனாக  நடித்த பிரபாஸ் தனது  நடிகர் பயணத்தில் அனைவராலும் பாராட்டப் படும் ஒரு நடிகராக இருந்துள்ளார். இதுவரை ஹீரோவாக இருந்த அவரது திரைப் பயணம் சூப்பர்ஹீரோவாக மாறியத் தருணம் என்றால் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலமாக. பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் பிரபாஸ். படத்தில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்களால் கொண்டாடப் பட்ட இரு கதாபாத்திரமாக இருந்தது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸை உயர்த்தியதும் பாகுபலி படம் தான்


பான் இந்தியா ஸ்டார்


தொடர்ந்து பாகுபலி 2 படத்தில் நடித்தார் பிரபாஸ். வெறும் பத்து நாட்களில் 1000 கோடி வசூலை தொட்ட ஒரே இந்திய படம் பாகுபலி 2. அதே நேரத்தில் அதிக வசூல்  ஈட்டிய இந்தியப் படங்களில் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தப் படம். இதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படமும் மிகப்பெரிய வசூல் எடுத்தது.  தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப் பட்ட பிரபாஸ் பான் இந்திய நடிகராக உருவானார்.


வரமா ? சாபமா ?


ஒரு பக்கம் பான் இந்திய ஸ்டார் என்கிற அடையாளம் ஒரு நடிகராக அவரை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியது மறுபக்கம் மிகப்பெரிய பட்ஜட் திரைப்படங்களைத் தவிர்த்து சின்ன பட்ஜட் திரைப்படங்களில் பிரபாஸை ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. தன்னுடைய ஆரம்ப  காலத்தில் எந்த மாதிரியான படங்கள் அவருக்கு இந்த அடையாளத்தைப் பெற்று கொடுத்ததோ அதே மாதிரியான பிரபாஸை மீண்டும் பார்க்க யாரும் விரும்பவில்லை. அவர் நடித்த ராதே ஷியாம் என்கிற படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்தப் படத்தின் தோல்வி குறித்து கேட்டபோது ரசிகர்கள் என்னை பாகுபலியாக மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று பிரபாஸ் பதிலளித்தார். 


காப்பாற்றுமா சலார்


இதனைத் தொடர்ந்து ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ் படத்தில் நடித்தார் பிரபாஸ். 500 கோடி ரூபாய் செலவில் இயக்கப் பட்ட இந்தப் படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது பாலிவுட் மார்கெட்டை இழந்து வரும் பிரபாஸிடம் இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை என்றால் பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் சலார் படம். பாலிவுட்டில் சரிந்துள்ள தனது மார்கெட்டை இந்த படத்தின் மூலம் மீண்டும் பிரபாஸ் மீட்டெடுப்பார் என்கிற  நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.  இதனைத் தொடர்ந்து  நாக் அஸ்வின் இயக்கும் மற்றொரு பான் இந்தியப் படமான கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். சைன்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.