எல்.ஜி.எம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சாக்‌ஷி தோனி பேசியதாவது:


மொழி தடையல்ல


“தோனிக்கும் தமிழ் மக்களுக்கும் மொழி என்றுமே தடையாக இருந்ததில்லை. அது ஒரு உணர்வு. அதனால் தான் நாங்கள் எங்கள் படத்தை இங்கே தொடங்க விரும்பினோம்.


இந்தக் கதை ஒரு உலகளாவிய பிரச்னை.  என் நண்பர்கள் பலரும் அவர்களுடைய மாமியார் உடன் உள்ள பிரச்னை பற்றி பேசி கேள்விப்பட்டுள்ளேன்.  நாங்கள் இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய முடியும் எனக் காண்பிக்க விரும்பினோம். அனைவரும் இந்தப் படத்தை மகிழ்ச்சியாக பாருங்கள்.


இந்தப் படத்துக்காக ஹைதராபாத், சென்னை என நான் ப்ரோமோஷன் செய்வது புதிதாக உள்ளது.  இந்தப் படத்தை நான் இரண்டு முறை பார்த்துள்ளேன். தோனியும் இந்த படத்தைப் பார்த்தார். அவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது” என்றார்.


ஆக்‌ஷன் கதையில் தோனி


தோனி ஹீரோவாக நடித்தால் என்ன் மாதிரியான கதையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “அவர் என்றுமே ஆக்‌ஷன் மோடில் இருப்பதால், ஆக்‌ஷன் படம் தான். நாங்கள் முதலில் சிறிய பட்ஜெட்டிலேயே தொடங்க விரும்பினோம்” என சாக்‌ஷி பேசியுள்ளார்.


முன்னதாக ஹைதரபாத்தில் ப்ரொமோஷன் பணிகளை மேற்கொண்ட சாக்‌ஷி, “இவ்வளவு கேமராக்களுக்கு முன் நான் தோன்றுவது இங்கு இதுவே முதன்முறை. என் கணவர் என்றுமே நிறைய ஆச்சர்யங்களைத் தரக்கூடியவர் இல்லையா. கிரிக்கெட் எண்டெர்டெய்ன்மெண்ட், என் கணவருக்கு அது வேலை.


எனவே சினிமா மற்றும் கிரிக்கெட் இரண்டுக்கும் இடையே உள்ள பொதுவான விஷயம் எண்டெர்டெய்ன்மெண்ட். அதனால் தான் தோனி என்டெர்ட்ண்டெய்மெண்ட்.


நாங்கள் இருவருமே திரைப்படங்கள் பார்ப்போம்.  நான் கதைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டவள்.  உங்கள் கதைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை திரைப்படங்கள். இந்தக் கதைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். எங்களிடம் நிறைய கதைகள் வந்துள்ளன. எல்.ஜி.எம் படத்தை நாங்கள் தமிழில் எடுத்துள்ளோம், ஆனால் தெலுங்கிலும் வெளியிட விரும்பினோம்” என்றார்.


ஹரீஷ் கல்யாண் பேச்சு


முன்னதாக சென்னை விழாவில் பேசிய ஹரீஷ் கல்யாண், “எனக்கு திரையரங்கில் படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இந்த இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக கொரோனாவுக்கு அப்புறம் எந்த படம் தியேட்டரில் வரும், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என நினைத்துப் பார்த்துள்ளேன். விஜய் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள்  படம் வெளிவரும்போது மக்கள் சுலபமாக திரையரங்குக்கு சென்று படம் பார்க்கிறார்கள். 


நானே விஜய்,ரஜினி ஆகியோரின் படங்களை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்துவிடுவேன். ஆனால் எங்களைப் போல் இளம் ஹீரோக்கள் படம் எப்படி இருக்கும் என்ற கவலை இருந்தது. ஆனால் போன ஆண்டும், இந்த ஆண்டும் லவ் டுடே, போர் தொழில், குட்நைட் போன்ற படங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார்.