பிக்பாஸ் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறிமுகமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்(Sakshi Agarwal). தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்.  ஆக்‌ஷன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால். 


கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" திரைப்படத்தில் ஆக்‌ஷன் கதாபாத்திரத்திலும்,  நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் எதிர்நாயகியாக வில்லி வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஹங்கமா (hungama) ஓடிடி தளத்தில் வெளியான “என் எதிரே ரெண்டு பாப்பா” படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் ராஜா ராணி படத்தில் நடித்து தான் ஏமாற்றம் அடைந்துவிட்டதாக நடிகை சாக்சி அகர்வால் நமது ஏபிபி நாடு செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்(Sakshi Agarwal Interview). 


ராஜா ராணி திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் !


ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் வெளியான திரைப்படம் ராஜா ராணி. மௌன ராகம் சாயல் என விமர்சிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆர்யாவின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் மால் சீனில் வரும் மாடர்ன் பெண்ணாக வருவார் சாக்‌ஷி.






அந்த காட்சியில் வில்லன்களிடம் சந்தானம் சாக்ஷியை காட்டி, ’’இங்க இருக்கறதுலயே அந்த ஃபிகர் எப்படி இருக்கு..நல்லா இருக்குல்ல’’..என கேட்கையில்..’’ஒன் கேப்பச்சீனோ ப்ளீஸ்’’..என ஸ்டைலாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு காஃபி ஆர்டர் செய்வார் சாக்ஷி அகர்வால்..அடுத்த காட்சியில் அவரை கலாய்க்கும் சந்தானம் ’’அதே ஃபிகர ஞாயிற்றுக்கிழமை காலையில 8 - 9 நைட்டியோட அவங்க வீட்டில யோசிச்சு பாருங்க..’’ என கூறுகையில் வாயில் டூத்ப்ரஷுடன் நைட்டி அணிந்து கெட்டப்பில் இல்லாமல் மொட்டப்பில் வருவார் சாக்‌ஷி அகர்வால். 


இவ்வாறு மொத்த படத்திலேயே 5 வினாடிகள் மட்டுமே வருவார் சாக்‌ஷி.



அட்லீ கிட்ட முன்னாடியே பேசிருக்கணும் 




இந்நிலையில் அந்த பட அனுபவம் குறித்து மனம் திறந்த சாக்‌ஷி அகர்வால், ’’ராஜா ராணி பட வாய்ப்பு வரும்போது நான் பெங்களூருவில் இருந்தேன். நான் மாடலிங் துறையில் கால்பதித்த ஆரம்ப காலம் அது..சென்னையிலிருந்து காஸ்டிங் மேனேஜர் ஒருவர் பெங்களூருவில் உள்ள எனது காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டார். அப்போது ஆர்யா தான் ஹீரோ..அட்லி இயக்குநர்..அந்த படத்தில் இரண்டாவது கதாபாத்திரத்திற்கான அழைப்புனு தான் சொன்னாங்க. ப்ரொடக்சன்ஸ் பற்றி கூட எனக்கு அப்போ தெரியாது. நான் இரண்டு நாட்கள் சூட்டிங் போனேன். ஒருநாள் சிட்டி செண்டர், ஒரு நாள் ECR..அதுக்கப்றம் டேட்ஸ்காக காத்திருந்தேன். ஆனால் படத்தோட சூட்டிங் முடிஞ்சு ரிலீஸே ஆயிடுச்சு. நான் டேட்டுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நான் இயக்குநர் கிட்ட பேசிட்டு போயிருக்கனும். அந்த தவறு எப்படி நடந்தது என தெரியவில்லை. ஆனால் அது எனக்கு ஒரு நல்ல பாடம். அதன் பின் அதை பற்றி நான் பெரிதாக பேச விரும்பவில்லை..’’ என தனது ஏமாற்றம் குறித்து பேசியுள்ளார் நடிகை சாக்சி அகர்வால்.