சாய் அப்யங்கர்
பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரினியின் மகனான சாய் அப்யங்கர் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். 'கட்சி சேர' ' ஆச கூட' ஆகிய இரு ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் மலையாளத்தில் உருவாகியுள்ள பல்டி படத்தின் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க சாய் அப்யங்கர் அவர் வாங்கிய சம்பளம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
2 கோடி சம்பளம்
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் ஷாந்தனு நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் டிராமா படம் பல்டி. ப்ரித்தி அஸ்ரானி , செல்வராகவன் , அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் டி குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் பல்டி படத்திற்கு இசையமைக்க சாய் அப்யங்கருக்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் சாய் அப்யங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. " பல்டி படத்திற்கு ஒரு இளம் இசையமைப்பாளரை அறிமுக படுத்த நினைத்தோம். சாய் அப்யங்கர் பொறுத்தமானவராக தெரிந்தார். அவரது பாடல்கள் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அவருக்கு இயல்பாகவே அந்த திறமை இருக்கிறது" என அவர் கூறினார்.
இசையமைக்கும் படங்கள்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டூட் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'ஊறும் பிளட்' பாடல் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வைரலானது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு , அல்லு அர்ஜூன் அட்லீ கூட்டனியில் உருவாகும் புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயன் , கார்த்தி , ராகவா லாரன்ஸ் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறார்.
விமர்சனங்கள்
மிக குறைந்த காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வரும் சாய் அப்யங்கர் மீது விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. பெற்றோர்களின் செல்வாக்கால் சாய் அப்யங்கருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாய் அப்யங்கர் பாடல்கள் ஹிட் ஆனாலும் இவற்றில் தொழில்நுட்ப தேர்ச்சி மற்றுமெ இருப்பதாகவும் ஏ.ஆர் ரஹ்மான் , அனிருத் போன்றவர்களின் இடத்தை பிடிக்க அவர் இன்னும் வளர வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.