தமிழ் சினிமாவில் புரட்சிகரமான வசனங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் வைத்து நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா உள்ளிட்ட படங்களை இயக்கி அவரை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வைத்தவர். அதேபோல், விஜய் வளர வளர அவரை அரசியலில் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. ரஜினிக்கு பிறகு என் மகன்தான் என பேசினார். மேலும், விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டங்களை வைத்து அவரை அரசியலுக்குக் கொண்டுவரும் ஆசையும் அவருக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக விஜய்க்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிரது. திடீரென அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார்.ஆனால், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதன்பின் அந்த முயற்சியை எஸ்.ஏ.சி. கைவிட்டார். அதனை குறித்து சமீபத்தில் நடந்த அவரது திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் வெளிப்படையாக பேசினார்.
பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 71வது படமாக உருவாகி இருக்கிறது 'நான் கடவுள் இல்லை' திரைப்படம். இப்படத்தைத் தனது சொந்த நிறுவனமான ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடிகை இனியாவும் மகளாகச் சிறுமி டயானா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகர், சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் குறித்தும், ஊடகங்கள் குறித்தும் காட்டமாக சில விஷயங்களை பதிவு செய்தார். அந்நிகழ்ச்சியில் அவர் திரைப்படம் குறித்து பேசியதாவது, "ஒரு காலத்தில் நான் குடும்பம், க்ரைம், த்ரில்லர், இதற்குள் சட்டம் எப்படி விளையாடுகிறது என்று படம் எடுத்து கொண்டிருந்தேன், எனக்கு பெயரே 'சட்டம்' சந்திரசேகர்தான். அதன் பின்னர் 1992-இல், விஜய்க்காக என் பாணியை மாற்றிக்கொண்டேன். அவரை அறிமுகம் செய்யும்போது இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்று முடிவு செய்து என் பணியிலிருந்து விலகி திரைப்படங்கள் செய்தேன்.
அதற்கு அப்புறம் என் பழைய பாணியிலான சமூகம் சார்ந்த திரைப்படத்தை இப்போது தான் நான் எடுத்திருக்கிறேன். இந்த படம் இதுவரை யாரும் சொல்லாத ஒன்றை பேசுகிறது. தர்மம் தோற்று அதர்மம் தலைதூக்கும்போது அங்கு நான் மீண்டும் மீண்டும் முளைத்து வருவேன் என்னும் கீதையின் வசனம்தான் இந்த படத்தின் கரு. இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை. சமுத்திரகனி இப்போதெல்லாம் ஆந்திராவில் டெண்ட் போட்டு தங்கிவிட்டார், அங்கு நிறைய சம்பளம் கொடுப்பார்கள், அங்கேயே இருந்து தமிழ்நாட்டை மறந்துவிடாதீர்கள் என்றேன். சமுத்திரகனி சமூக நோக்கம் உடைய மனிதர். ஈவு, இரக்கம், மனிதம் உள்ளவன்தான் மனிதன். அப்படிப்பட்ட ஒரு மனிதனோடு தான் இந்த படத்தை செய்திருக்கிறேன். சினிமா சமூக நோக்கத்தோடுதான் இருக்க வேண்டும்." என்றார்.
விஜயுடனான பிரச்சனை எங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை அதில் மீடியாக்கள் மூக்கை நுழைக்காதீர்கள் என்று காட்டமாக ஊடகங்களின் மீது அதிருப்தி தெரிவித்ததுடன் குறிப்பிட்ட ஒரு யூட்யூப் சேனலை குறித்தும் பேசினார், "இதே மேடையில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு பெயர் வைத்த காரணங்களை சொன்னேன், அமிதாப் பச்சனின் பல திரைப்படங்களில் விஜய் என்ற பெயர் இருக்கும், விஜய் என்றால் வெற்றி, என்று கூறியிருந்தேன். ஆனால் வலைதளத்தில் ஒரு மூன்று பேர் அமர்ந்துகொண்டு, விஜயின் தாத்தா வாஹிணி ஸ்டுடியோஸில் வேலை செய்தார், விஜய் பிறந்ததும் நாகி ரெட்டியிடிடம் கொண்டு சென்றார்கள், அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததாக கூறுகிறார்கள். மீடியாவில் இருக்கும் நீங்கள் பொறுப்புடன் உண்மையை பேசுங்கள். விஜய்க்கு நான் பெயர் வைத்தேன் என்று கூறினால் நம்பமாட்டீர்களா. விஜய்க்கும் எனக்கும் பிரச்சனை தான், அதனால் என்ன, குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அது எங்களுடைய தனிப்பட்ட விஷயம்." என்று எஸ் ஏ சந்திரசேகர் முடித்தார்.