'சாட்டை' திரைப்படம் மூலம் மக்கள் மனதில் பதிந்த ஒரு நடிகர் யுவன். இவரின் உண்மையான பெயர் அஜ்மல் கான். நடிகர் சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'சாட்டை' படத்தில் ஒரு பள்ளி மாணவனாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்திய யுவன் அதை தொடர்ந்து கமர்கட்டு, இளமி, அய்யனார் வீதி, அடுத்த சாட்டை என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் சாட்டை படத்திற்கு கிடைத்த ரீச் அவர் தொடர்ந்து நடித்த எந்த படத்திலும் கிடைக்கவில்லை. 


 



பாலாவின் பட வாய்ப்பு : 


நல்ல ஒரு டர்னிங் பாயிண்ட் படத்திற்காக யுவன் காத்திருந்த சமயத்தில் தான் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் லீட் ரோலில் நடிக்க யுவனுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. எந்த ஒரு நடிகனுக்கும் பாலாவின் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசை, கனவு நிறைவேற போகிறது என அந்த படத்தின் கேரக்டருக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு தன்னை முழுமையாக தயார்படுத்தி வந்தார் யுவன். 


நழுவிய கனவு : 


கொரோனா காலகட்டத்தில் அந்த படம் ஒத்திவைக்கப்பட்டது பின்னர் கைவிடப்பட்டது. யுவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். பலரும் படம் குறித்து கேள்விகள் கேட்டு மேலும் அதை ரணப்படுத்தியதால் வெறுத்துப்போன நடிகர் யுவன் சினிமாவில் இருந்து சில காலம் பிரேக் எடுத்து கொள்ள வேண்டுமென ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். பரோட்டா போடுவதை கூட நாகூருக்கு சென்று பாலாவின் படத்திற்காக தான் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் தத்ரூபமாக இருக்க வேண்டும் என அவர் எடுத்த முயற்சி இன்று அவரின் வாழ்க்கையாக மாறிப்போனது. இந்த தகவல்களை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார் யுவன்.


 



பிரமாண்டமான திருமணம் :  


இந்நிலையில் தற்போது நடிகர் யுவனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள தகவல் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் ஃபிரோஸ் கான் மகனான அஜ்மல் கானுக்கும் ( யுவன்), கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள விஜிபி ரிசார்ட்டில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. 


இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மன்சூர் அலிகான், உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் யுவனின் இந்த திடீர் திருமணத்திற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.