விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வெளியாகி, எதிர்மறையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்(SA Chandrasekhar) தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


அந்தப் பேட்டியில், “திரைக்கதையில்தான் மேஜிக் இருக்கிறது. ஒரு கனமான விஷயத்தை கையில் எடுக்கிறீர்கள். அதில் ரா, மிலிட்டரி உள்ளிட்ட பலவற்றை பற்றி பேசுகிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் முதலில் அதனை முறையாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்துகொள்ளாத பட்சத்தில் நீங்கள் இப்படியான படத்தை எடுக்க முடியாது. இந்தப்படம் முழுக்க விஜயை மட்டுமே வைத்து நம்பி எடுக்கப்பட்ட படம்.  பீஸ்ட் படத்தை பொறுத்தவரை எல்லோரும் இருக்கிறார்கள்... ஆனா டைரக்டர்..?”..


இப்போது வருகிற இளம் இயக்குநர்கள் முதல் படத்தை எல்லாவிதத்திலும் திருப்திகரமாக எடுத்து விடுகின்றனர். இராண்டாவது படத்தையும் அப்படியே எடுத்து விடுகிறார்கள். இதனால் பெரிய நட்சத்திரங்கள் அவர்களை தேடி செல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் போது அந்த இளம் இயக்குநர்கள் அதான் ஹீரோ கிடைத்துவிட்டார் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.” என்று பேசியுள்ளார். 


 



நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பது முதல் காட்சி முடிந்தவுடனேயே தெரிந்துவிட்டது. சமூக வலைதளங்களிலும் பீஸ்ட் படத்தை ட்ரோல் செய்து மீம்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் முதல் இரண்டு நாட்களில் பீஸ்ட் திரைப்படம் 200 கோடிக்கு மேலே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் இந்தப்படத்திற்கு போட்டியாக வெளியிடப்பட்டிருக்கும் கே.ஜி.எஃப் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று 500 கோடிக்கு வசூலித்துள்ளது.