தான் சென்சார் போர்டில் இருக்கும்போது வாங்காத திட்டுகளே இல்லை என பட விழா ஒன்றில் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 


சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், ‘எமகாதகன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர், சென்சார் போர்டு விவகாரம் பற்றி பேசினார். அதில், “நான் சென்சார் போர்டில் இருக்கும்போது வாங்காத திட்டுகளே இல்லை. இன்னைக்கு எல்லாருக்கும் யு சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்பது ஆசை.


ஆனால் எடுக்குறது எல்லாம் ஏ பிளஸ் காட்சிகள்தான். நம்ம ஆடியன்ஸூம் அதுக்கும் மேல. குழந்தைகள் எல்லாம் கூப்பிட்டு வந்த அப்புறம் என்ன இப்படியான படங்களை எடுத்து வச்சிருக்கீங்கன்னு கேக்குறாங்க. அதான் ஏ சர்ட்டிபிகேட் போட்டுருக்கேன்னு சொன்னா, அப்படி கொடுத்த இப்படி எடுப்பிங்களா, அப்ப நாங்க குழந்தைகளை எங்க கொண்டு போய் விடுறதுன்னு கேக்குறாங்க. அதுக்காக தியேட்டர்காரர்களா குழந்தைகளை பார்த்துக்க முடியுமா?


நாம முதலில் அது என்ன படம், என்ன சர்ட்டிபிகேட் உள்ள படம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அதன்பிறகு உள்ளே வந்து படத்தை திட்டுறது. வெறும் ஏசிக்கு வருகிறவர்கள் என்றால் ஏதாவது கல்யாண மண்டபத்தில் போய் உட்காரலாமே. நான் எதற்காக சொல்கிறேன் என்றால் ஒருத்தரை நாம குறை சொல்வதற்கு  முன் நாம் சரியாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதை பார்க்கும் வரை எதுவும் மாறாது. எல்லா துறைகளிலும் தவறுகள் இருக்கு. அது சினிமா, அரசியலில் வரும்போது மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. பொதுவெளியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் யாரும், யாரையும் வெறுக்கக்கூடாது. சினிமா வியாபாரம் தான், அதை பணத்துக்காக மட்டும் பார்க்கக்கூடாது. 


முன்னாடி சென்சார்ன்னு சொன்னாங்க. இப்ப இந்த மாதிரி காட்சிகள் இருந்தால் இந்த சர்ட்டிபிகேட் தருவோம் என சொல்றாங்க. இதை நீங்க கட் பண்ணுங்கன்னு சொல்லல. குழந்தைகளோட பார்க்கலாம் என சொல்லக்கூடிய யு சர்ட்டிபிகேட் படத்தில் தலையை தனியா சீவுறதும், அந்த உடல் ஆடுறதுமான காட்சிகள் இருக்கு. அது எப்படி அந்த வகையில் வரும். சென்சார் பண்ண வேண்டிய இடத்தில் அட்ஜஸ்மெண்ட் இருப்பதால் தான் ரசிகர்கள் அதனை எதிர்க்கிறார்கள்” என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.


ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகம் அடங்கிய படங்கள் சர்வ சாதாரணமாக வரத் தொடங்கியது. இது ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கக்க்கூடிய ரஜினி, விஜய், கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் கூட இடம்பெற்றுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.