அடுத்தடுத்து அசத்தும் எஸ்.ஜே.சூர்யா!


குஷி, வாலி போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படத்தின் மூலம் நடிகராக கம் பேக் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா, சமீப காலத்தில் நடிக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெறுகின்றன.


சிலம்பரசன் நடித்த மாநாடு, விஷாலுடன் மார்க் ஆண்டனி, சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா என ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டி வருகிறார். குறிப்பாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில்  வழக்கமான எஸ்.ஜே.சூர்யாவாக இல்லாமல் மிகக் குறைவான வசனங்கள் பேசி உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.


தயாரிப்பாளராகவும் நெல்சன் திலிப்குமார்


கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார். இயக்குநரைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க இருக்கிறார்  நெல்சன். லிஃப்ட் , டாடா உள்ளிட்ட படங்களில் நடித்த கவின் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சனின் உதவி இயக்குநரான சிவபாலன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்களின் தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.


நடிகர்கள்


இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில்  நடித்து வருவதாகவும், மைசூரில் கவின் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருக்கும் இடையிலான முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.