பாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் சஞ்சய் தத் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் மிரட்டலான வில்லனாக அதீரா என்ற கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை அதிர வைத்தார். மிகவும் பயங்கரமான வில்லனாக திரையில் தோன்றிய சஞ்சய் தத்திற்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் வில்லனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் தான் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.
கேடி - தி டெவில் படத்தில் சஞ்சய் தத் :
நடிகர் சஞ்சய் தத் தற்போது கன்னடத்தில் பிரேம் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடித்து வரும் 'கேடி - தி டெவில் ' திரைப்படத்திலும் முக்கியமான வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கேடி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பெங்களூரில் உள்ள மாகடி சாலையில் ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த சமயத்தில் சண்டை காட்சிகளுக்காக டம்மி குண்டுகள் பயன்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் நடைபெறுகையில் எதிர்பாராத விதமாக டம்மி குண்டுகள் வெடித்ததில் நடிகர் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மருத்துவமனையில் அனுமதி :
டம்மி குண்டுகள் வீரியத்துடன் வெடித்த இடத்திற்கு மிக அருகில் சஞ்சய் தத் இருந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரின் முழங்கை, கை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அதற்கு முதலுதவி செய்யப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து தகுந்த விளக்கம் எதையும் இதுவரையில் கேடி படக்குழு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தால் சுற்றியுள்ள பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் நீண்ட நேரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
சஞ்சய் தத் விளக்கம் :
சோசியல் மீடியாவில் சஞ்சய் தத் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவி வரும் தகவலுக்கு தனது ட்விட்டர் மூலம் விளக்கமளித்துள்ளார் சஞ்சய் தத். "எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை நான் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். கடவுள் அருளால் நான் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன் மற்றும் என்னுடைய காட்சிகளை படமாக்கும் போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அணுகியதற்கும் உங்கள் அக்கறைக்கும் அனைவருக்கும் நன்றி" என போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள்.
ரீ என்ட்ரி கொடுக்கும் ஷில்பா ஷெட்டி :
1970களில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது 'கேடி - தி டெவில்' திரைப்படம். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு கன்னட திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அர்ஜுன் ஜன்யா.