‘லாக்கப்’ பட இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸின் அடுத்த படைப்பு, சொப்பன சுந்தரி. இதில், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து தீபா, லக்ஷமி பிரியா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ட்ரைலர் வெளியானதிலிருந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. அதை சொப்பன சுந்தரி திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.
காருக்காக நடக்கும் போர்..
நகைக்கடையில் வேலை பார்க்கும் சாதாரண குடும்பத்து பெண், அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்). இவர் வாங்கிய நகைக்கு பம்பர் பரிசாக கார் ஒன்று கிடைக்கிறது. அகல்யாவின் வாய்பேச முடியாத அக்கா தேன்மொழி(லக்ஷமி பிரியா) ஒருநாள் அந்த காரை எடுத்துக்கொண்டு தனது வருங்கால கணவருடன் இரவில் பயணம் போகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவரை அடித்து தூக்கி விடுகிறார். விபத்தில் சிக்கிய அந்த உடலை எடுத்து, கார் டிக்கியில் வைத்துக்கொள்கின்றனர்.
மறுநாள், தான் வாங்கிய நகைக்கு கிடைத்த கூப்பனை அகல்யா உபயோகித்ததால்தான் அவருக்கு அந்த பரிசு கிடைத்தது என்றும் அதனால் அந்த கார் தனக்கு சொந்தமானது என்றும் கூறி சண்டையிடுகிறார் அகல்யாவின் அண்ணன் துரை (கருணாகரன்). இந்த விஷயம் காவல் நிலையம் வரை செல்ல, துரை நகை வாங்கிய ரசீதை காண்பித்துவிட்டு காரை எடுத்து செல்லும்படி கூறுகின்றனர். பிணத்துடன் இருக்கும் கார், காவல் நிலையத்திலேயே நிற்கிறது. இது அகல்யாவின் குடும்பத்திற்கு தெரியவர, அந்த காரை எப்படியாவது காவல் நிலையத்திலிருந்து அகற்றிவிட வேண்டும் என போராடுகின்றனர்.
இவர்கள் ஒரு புறமிருக்க, அகல்யாவின் அண்ணன் துரையும் காரை அபகரிக்க தனது மச்சானுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார். இறுதியில் அந்த கார் யாருக்கு கிடைத்தது? காரில் இருக்கும் பிணத்திற்கு என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு காமெடியாக விடையளிக்கிறது மீதி கதை.
காமெடி-த்ரில்லர்:
த்ரில்லர் படம் என்றால், முகத்தை இருக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, வாய் விட்டு சிரிக்கவும் செய்யலாம் என்பதை, சொப்பன சுந்தரி படம் ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது. ஆரம்பத்தில், கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் கதை, மெல்ல மெல்ல நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் போல ஸ்பீடு எடுக்க தொடங்குகிறது. மொத்த கதையும் சில கதாப்பாத்திரங்களை மட்டுமே சுற்றி மட்டுமே சுழல்வதால் பார்த்த முகங்களையே பார்த்து சலிப்பூட்டுகின்றது. ஒரு சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள், பல இடங்களில் எரிச்சலூட்டுகின்றன. வசனம் எழுதுவதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
‘இந்த கார வெச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வெச்சிருக்கா…’ என்ற கவுண்டமணி-செந்திலின் காமெடி வசனத்தை அடிப்படையாகக் கொண்டு, காரை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு சொப்பன சுந்தரி என பெயரிடப்பட்டுள்ளது போலும். ஏனென்றால், படத்தின் கதைக்கும் டைட்டிலிற்கும் சம்மந்தமே இல்லை.
‘டாக்டர்’ படத்தை நினைவூட்டும் நட்சத்திரங்கள்
டார்க் ஹியூமர் பாணியில், 2021ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் புதுமை காட்டிய படம் டாக்டர். இப்படத்தில் நடித்திருந்த பாதி நட்சத்திரங்கள் இதிலும் நடித்துள்ளனர். கிங்ஸ்லீ, தீபா, சுனில் ரெட்டி, பிஜார்ன் சுர்ரோ ஆகியோர் அப்படியே டாக்டர் படத்தில் செய்ததைதான் சொப்பன சுந்தரி படத்திலும் காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றனர். தீபாவின் வெகுளித்தனமான நடிப்பு, பாராட்டத்தக்கது. ஒரு புதிவிதமான காமெடி உணர்வை ரசிகர்களுக்கு விருந்தாக அளிக்கிறது, சொப்பன சுந்தரி.
ஒற்றை ஆளாக கதையை சுமக்கும் நாயகி!
ஐஸ்வர்யாவிற்குதான் படத்தில் வெய்ட்டான ரோல், மொத்த ட்விஸ்டும் இவர் செய்யும் செய்கைகளை வைத்துதான் அமைந்துள்ளது. கார் கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோஷத்தில் குதிக்கும் இடத்திலும், தனது அக்காவிற்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாது என அவரை காப்பாற்ற போராடும் இடத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். க்ளைமேக்ஸ் சண்டையில் எகிறி எகிறி சண்டையிட்டாலும், நிதானத்தை முகத்தில் காண்பித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.
தியேட்டருக்கு போய் பார்க்கலாமா?
காமெடி-கொஞ்சம் த்ரில்லர் என சில சிறப்பான அம்சங்கள் படத்தில் இருந்தாலும், கொஞ்சம் சொதப்பலான திரைக்கதையினால் அவை வெளியில் தெரியாமலேயே போகின்றன. இருப்பினும், சிம்பிளான-வித்தியாசமான கதையமைப்பை கொண்டுள்ளதால் ரசிகர்களின் பாராட்டை பெருகிறது, சொப்பன சுந்தரி.
மொத்தத்தில், குடும்பத்துடன் 2 மணி நேரத்தை சிரித்து செலவிட நினைத்தால், இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று தாராளமாக பார்க்கலாம்.