தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.  மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஜெயிலர் திரைப்படம் நடிகர் ரஜினிக்கு சிறந்த ஒரு கம் பேக் கொடுத்தது. அதை தொடர்ச்சியாக அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். 


 




ஜெயிலர் படத்தில் ஓய்வுபெற்ற சிறைக் கண்காணிப்பாளராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காவல்துறை அதிகாரியான அவரின் மகன் காணாமல் போக அவரை தேடும் போது இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. மகன் கொலைக்கு காரணமாக இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் படி கதைக்களம் நகரும் போது திடீரென மகன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைக்கிறது. அதற்காக அவருக்கு வழங்கப்படும் டாஸ்கை ரிஸ்க் எடுத்து செய்கிறார். மகனை மீட்டாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை. மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்ந்த இந்த கதைக்களத்தில் மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். 


 


ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


 




இப்படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எழுதி வருகிறார் என்றும் இப்படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை 60 கோடியாக நெல்சன் திலீப்குமார்  உயர்த்தி விட்டார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த இரண்டாம் பாகத்தில் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் மீண்டும் கேமியோ ரோலில் நடிப்பார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து மற்றொரு பாலிவுட் நடிகரும் இணைய உள்ளார் என்றும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் ஜெயிலர் 2 படம் குறித்த அதிகாரபூர்வமான அறிக்கைக்காக  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 


த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படத்தின் பணிகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் பிஸியாக ஈடுபட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.