தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு தனது வசீகரமான அழகாலும், திறமையான நடிப்பாலும் ஏரளமான ரசிகர்களை வசியம் செய்தவர். மிகவும் பிஸியாக இருந்த சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சகுந்தலம்' மற்றும் 'யசோதா'. 


 



சில மாதங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா சிகிச்சை மேற்கொண்டு வந்ததால் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. அதனால் பல திரைப்படங்களின் பணிகள் தாமதமாகி வந்தன. அந்த வகையில் நடிகை சமந்தா 'சிட்டாடல்' எனும் பாலிவுட் வெப் சீரிஸில் நடித்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் சமந்தா இந்த வெப் சீரிஸில் இருந்து விலகியதாக வதந்திகள் பரவின. இந்த கிசு கிசுவிற்கு ஒரு போஸ்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. 


ஸ்பை த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் 'சிட்டாடல்' பாலிவுட் வெப் சீரிஸ் தொடரை ராஜ் நிடமொரு மற்றும் கிருஷ்ணா டிகே தயாரிக்கிறார்கள். சமந்தா இந்த வெப் சீரிஸ் தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்ட வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஏற்கனவே ஹீரோவாக நடிக்கும் வருண் தவான் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 


 






கலக்கல் பர்ஸ்ட் லுக்:


பரபரப்பான அப்டேட்டாக வெளியான சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கலக்கலாக லெதர் ஜாக்கெட், ஜீன்ஸ், டின்ட் கிளாஸ் அணிந்து ஸ்டைலிஷ் போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வெப் தொடரில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் மிகவும் போல்ட்டான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என்பது போஸ்டர் மூலம் வெளிப்படுகிறது. 



அமேசான் ஃபிரைம் வீடியோவில் வெளியாக இருக்கும் 'சிட்டாடல்' வெப் சீரிஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சமந்தா மற்றும் வருண் தவான் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வருண் தவான் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் முதல் ஷெட்யூலில் நிறைவடைந்துள்ளது. சமந்தா அல்லாமல் தனியாக வருண் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இந்த ஷெட்யூலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் மூல வருண் தவான் முதல்முறையாக ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


விரைவில் படப்பிடிப்பு:


அந்த வகையில் சமந்தா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் தகவல் குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தி ஃபேமிலி மேன் தொடரைத் தயாரித்த ராஜ் நிடமொரு மற்றும் கிருஷ்ணா டிகே அடுத்ததாக தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ் மூலம் மீண்டும் நடிகை சமந்தாவுடன் இணைகிறார்கள். இந்த திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமானவர் சமந்தா தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். விரைவில் சமந்தாவை ஃபுல் ஃபார்மில் பார்க்க அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.