ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான 1105 காலி இடங்களுக்கு நடத்தப்படும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.


தேர்வு முறை எப்படி?


முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://upsconline.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* அதில், One-time registration (OTR) for examinations of UPSC and online application என்ற பகுதியைத் தேர்வு செய்து, க்ளிக் செய்யவும். 


* முன்பதிவு செய்யாதவர்கள், புதிதாக விண்ணப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். 


* ஏற்கெனவே செய்துள்ளவர்கள், இ- மெயில், மொபைல் எண் அல்லது ஓடிஆர் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். 


* இதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 


தேர்வுக் கட்டணம்


அனைத்து தேர்வர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. 


அதிக காலி இடங்கள்


இந்த ஆண்டில் மட்டும் 1105 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த 7 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் ஆகும். 2022ஆம் ஆண்டில் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் 712 காலிப் பணியிடங்கள் உண்டாகின.


2020ம் ஆண்டில் 796 காலிப் பணியிடங்களும், 2019ம் ஆண்டில் 896 காலிப்பணியிடங்களும், 2018ல் 782 காலிப் பணியிடங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன. கடைசியாக 2016ஆம் ஆண்டு 1209 காலி இடங்கள் நிரப்பப்பட்டன.


தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த விதிகளை முழுமையாக அறிய: https://upsc.gov.in./sites/default/files/Notif-CSP-23-engl-010223.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.