தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள 'அமரன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK23 படத்துக்காக இணைந்துள்ளார். போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு வெளியான 'பிர்பால் ட்ரைலாஜி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட படத்தின் மூலம் பிரபலமானார். இரு பாகங்களாக வெளியான அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்திய எல்லையில் சண்டை போட்டு உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் வசந்த் வேணுகோபாலனின் மகள் தான் ருக்மணி வசந்த். அவரின் அம்மா ஒரு பு. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்.
நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது திரைப்படத்தின் ஹீரோயினாக ருக்மணி வசந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எஸ்கே 23 படத்தில் கமிட்டாகிவிட்டார். மிருணாள் தாகூர் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் ருக்குமணி வசந்த் ஒப்பந்தமானார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் 51 வது படமான ACE படத்தில் நான் நடித்த சில க்ளிப்பிங்களை ஏ.ஆர். முருகதாஸ் பார்த்துள்ளார். என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்து போனதால் எஸ்கே 23 படத்திற்கு என்னை தேர்ந்து எடுத்தார். ஆன் தி ஸ்பாட் ஒரு காட்சியை மேம்படுத்த கூடியவர். உடனுக்குடன் அவருக்கு எப்படி இப்படி அசத்தலான ஐடியா வருகிறது என்பதை பார்க்க வியப்பாக இருக்கிறது.
அதே போல சிவகார்த்திகேயன் எனக்கு எல்லா காட்சிகளிலும் உதவியாக இருந்தார். அவர் மிகவும் நேர்மையான அன்பான சக நடிகர். மிகவும் திறமையானவர் என கூறியுள்ளார் நடிகை ருக்மணி வசந்த்.
தீனா, கஜினி , துப்பாக்கி , கத்தி, சர்கார் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர்ந்துள்ள இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.