திரௌபதி படத்திற்கு பிறகு இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதற்கு சலங்கை கட்டிவிட்டவர் ஹெச்.ராஜா, படத்தை பார்த்துவிட்டு ‘தர்மம் வெல்லும்’ என அவர் ட்வீட் போட, தேச பக்தர்கள் திரையரங்குகளுக்கு காலை முதலே படையெடுக்கத் தொடங்கினர்.


திரையரங்கின் உள்ளே நுழைந்ததும், வெளுத்த வெள்ளை சட்டையும், பழுத்த காவிச் சட்டையுமாக பலர் இருக்கைகளை நிரப்பியிருக்க, சற்று பதற்றத்துடனேயே படத்தை பார்க்கத் தொடங்கினோம். ’விக்ரம் வேதா’ திரைப்படத்தில் வருவதுபோல படத்தின் ஹீரோவான ‘ருத்ர பிரபாகரன்’ வழக்கறிஞரான ஒய்.ஜி.மகேந்திரன் முன் சிறையில் அமர்ந்து ‘ஒரு கதை சொல்லட்டா சார்’ பாணியில்  அவர் கதையை சொல்ல தொடங்குகிறார்.


நேர்மையான, தனது மனசாட்சிக்கு பயப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டரான ’ருத்ர பிரபாகரன்’ காசிமேடு ஹார்பர் மூலம் கடத்தி, இளைஞர்களுக்கு விற்கப்படும் போதைப்பொருட்களை திட்டமிட்டு பிடிக்கிறார். இதில் அப்செட்டாகும் போதைப் பொருள் கடத்தல் செய்யும் அரசியல் தலைவரான ‘வாதாபி’ (கவுதம் வாசுதேவ் மேனன்), ருத்ரனிடம் பிடிபட்ட போதைப்பொருட்களை விடுவிக்கச்சொல்லி, தொலைபேசியில் பேசியும் அந்த டீல் முடியாமல் போகிறது. இதனால் அப்செட்டான வாதாபி, ருத்ரனை பழிதீர்க்க கங்கணம் கட்டுகிறார். கங்கணம் கட்டிய கையோடு எதையோ கழட்ட போகிறார் என்று பார்த்தால், ’காத்திரு பகையே’ என எக்கச்சக்க சீன்களுக்கு பிறகுதான் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.


ஹீரோவோ தனது ஏரியாவுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரவுடிகளை விரட்டுவது, விரட்டி விரட்டி வெளுப்பது, அடிப்பது, அடித்து அடித்து துவைப்பது என ‘முரட்டு’ போலீசாக வலம் வருகிறார். ’முள்ளும் மலரும்’ போல ரவுடிகளிடமும், போதை பொருட்களை கடத்துபவர்களிடம் கடுப்பு காட்டும் ருத்ரன், சக போலீஸ்காரர்களிடம், தன் வீட்டுக்காரம்மாவிடமும் நமது கண்ணில் கண்ணீர் சிந்திவிடாத அளவுக்கு பாசம் காட்டுகிறார்.  


இப்படி படம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் இரண்டு இளைஞர்களை ருத்ரன் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்கள் இருவரும் பைக்கில் தப்பியோடுகின்றனர். அவர்களை ‘இவன்தாண்டா போலீஸ்’ பாணியில் விரட்டி பிடிக்க நினைக்க, அது முடியாமல் போகிறது. அதனால் ஆத்திரம் அடைந்து வண்டியை உதைத்து தள்ளுகிறார். இதனால், இருவரும் விழுந்து காயமடைய ‘கருணையே’ உருவான ருத்ரன் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்கிறார்.


அவர்கள் இருவர் மீது கஞ்சா வழக்கு போடாமல், பெற்றோர்களை அழைத்து அறிவுரை சொல்லிவிட்டு, பொது இடத்தில் நின்று புகைப்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து இருவரையும் விடுவிக்கிறார் ருத்ரன். இதுவரையில் ரவுடிகளை பிடிப்பது, அடிப்பது, அடித்து வெளுப்பதுமாக இருக்கும் ருத்ரனின் அன்றாட வாழ்க்கை இதன்பிறகு மாறிப்போகிறது. அதில் தலையில் காயம்பட்ட ஒருவன், வீட்டில் வலிப்பு வந்து இறந்துவிட, அவனது சாவுக்கு ருத்ரன்தான் காரணம் என கட்டம் கட்டப்படுகிறது. இந்த வழக்கால் பதவி பறிபோய் சிறைக்கு செல்லும் ருத்ரன், இந்த வழக்கில் வென்றாரா? அந்த இளைஞனின் சாவிற்கும் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தாரா ? போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வாதாபியை வதம் செய்தாரா என்பதுதான் மீதிக்கதை.


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வாதாபியை ருத்ரன் வதம் செய்வதுதான் படத்தின் ஒன்லைன் என்றாலும் வன்கொடுமை தடுப்பு சட்டம், மதமாற்றம், நாடக காதல் என படத்தில் தனது கருத்துகளை வைத்து நர்த்தனம் ஆடியிருக்கிறார் மோகன் ஜி.


 ‘தருமபுரிக்காரர் ருத்ரன்’


’அவன் தருமபுரிக்காரன், நமக்கெல்லாம் அடங்கமாட்டன்’ என்ற டயலாக்கை வைத்து, ருத்ரனை தருமபுரியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக படத்தின் தொடக்கத்திலேயே காட்டி, ‘அடங்காதவன், அன்பானவன், அசராதவன்’ தருமபுரிக்காரன் என சொல்லாமல் சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர்.


‘அம்பேத்கர் படமும் வன்கொடுமை தடுப்பு சட்டமும்’


அம்பேத்கர் படம்போட்ட டீ சர்ட் போட்டதால்தான், சாதி ஆணவத்தில் இளைஞர்களை இன்ஸ்பெக்டர் ருத்ரன் எட்டி உதைத்தார் என வழக்கு புனையப்பட்டு, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் திட்டமிட்டு பாய்வதுபோல காட்சிகளை அமைத்திருப்பது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை பட்டியலின மக்கள், மாற்று சமூகத்தினர் மீது உள்நோக்கத்தோடு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.


ருத்ரனுக்காக வாதாட வரும் வழக்கறிஞரான ராதாரவி நான் ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவன் என ஓப்பன் கோர்ட்டில் சொல்லி ‘என் வீட்டில் முத்துராமலிங்கத் தேவர் படமும் இருக்கிறது, அம்பேத்கர் படமும் இருக்கிறது’ இவர்கள் எல்லாம் பொதுவான தலைவர்கள், இவர்களை ஆதாயத்திற்காக சாதியத் தலைவர்களாக பயன்படுத்துகின்றனர் என வாதிடுவது போன்ற சீன்கள் எல்லாம், அம்பேத்கரை அரசியல் ஆதாயத்திற்காக கட்சியினரும், பிற அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர் என்பதை தனது படத்தின் மூலம் சொல்லி பிரகடனப்படுத்த முனைந்திருக்கிறார் மோகன் ஜி.


மதமாற்றத்தை எதிர்க்கும் ருத்ரதாண்டவம்


இந்துக்களை திட்டமிட்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதுபோல படத்தில் காட்சிகள் அமைத்திருக்கும் இயக்குநர், கிறிஸ்துவ மிஷனரிகள் எக்கச்சக்கமாக நன்கொடை பெற்று, அதன்மூலம் பல்வேறு காரியங்களை சாதித்துக்கொள்வது போன்றும் சீன்கள் அமைத்திருக்கிறார்.


 இந்து மதத்தில் பட்டியலினத்தில் இருந்தவர்கள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு சாதமாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் ஞானஸ்தானம் பெற்றபிறகு நடைமுறையில் கிறிஸ்துவர்களாக வாழ்ந்தாலும் சான்றிதழின் படி அவர்கள் இந்துக்கள் அவர்களுக்கு பெயர் ‘கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ்’ என்பதையும் ‘வாஸ்கோடாகாமா’ அளவிற்கு ஆய்வு செய்து கண்டுபிடித்து காட்சிகள் அமைத்திருக்கிறார். இந்த இடம் வரும்போது கைத்தட்டல்களும், விசில்களும் காவிச் சட்டை அணிந்தவர்களிடம் இருந்து பறந்து வந்தது என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.


’என் பசங்கதான் மதம் மாறிட்டாங்க, நான் மாறல’ – ‘நான் எப்படி பொறந்தேனோ அப்படியே மண்ணுக்குள்ள போகனும்னு நெனக்கிறவ’ என மதமாற்றத்திற்கு எதிராக புரட்சிகர டயலாக் என நினைத்து மோகன் ஜி படத்தில் வைத்திருக்கும் வசனத்திற்கு வரிசைக்கட்டி கமெண்ட் வந்து தெறிக்கிறது.


அய்யாவான அம்பேத்கர்


தன்னுடைய படத்திற்கு யாரும் ‘சாதிய படம்+’ என முத்திரை குத்தவிடக்கூடாது என்று, அம்பேத்கர் பெயர் சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும் அம்பேத்கருக்கு பின்னர் ‘அய்யா’-வை சேர்த்துவிட்டு, அம்பேத்கர் அய்யா, அம்பேத்கர் அய்யா என நடிகர்களை சொல்ல வைத்து, மிகப்பெரிய உத்தியை கையாண்டிருக்கிறார் மோகன் ஜி. இதன்பிறகு இந்த படத்தை ஒரு சாதி படம் என எவரும் சொல்லிவிடமுடியாது என அவர் இன்னும் நம்பிக்கொண்டிருப்பார்.


நாடகக்காதல்


அதேபோல், படத்தில் 18 வயது ஆன பெண்ணை காதல் என்று சொல்லி அழைத்துக்கொண்டுபோய், ஒரு குறிப்பிட்ட சமுக்கத்தினர் அடைத்து வைத்திருப்பதும். அவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதுபோலவும் காட்சிகள் அமைத்திருப்பது, அந்த பெண்ணை மீட்டு அறிவுரை சொல்லி ருத்ரன் அனுப்பி வைப்பதுமாக காட்சிகள் வைத்திருப்பதன் மூலம் ‘நாடக காதல்’ என்ற பதத்தை தன் படத்திலும் கையாண்டு இருக்கிறார் இயக்குநர்.


'ஜி'யின் கடமையுணர்வு


போலீஸ்காரர்கள் அத்தனை பேருமே நல்வர்கள் போல காட்டியிருப்பது, வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது என கூறியிருப்பது, காசிமேடு உள்ளிட்ட வடசென்னைதான் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களின் கூடாரமாக இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருப்பது, கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துக்களை திட்டமிட்டு மதமாற்றம் செய்கின்றனர் என சீன்கள் வைத்திருப்பது, சாமிக்கு கற்பூரம் காட்டும் தட்டு கீழே வீழுந்தால் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என காட்டுவது போன்ற காட்சிகள் மூலம் இயக்குநர் மோகன் ஜியின் கடமையுணர்வை கண்டுக்கொள்ள முடிகிறது.


இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் எதற்கு வந்தார் என்று கடைசிவரை தெரியாதபோதும், எப்போதாவது வரும் வாதாபியான கவுதம் வாசுதேவ் மேனன் தனது வில்லத் தனத்தை காட்டும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். அவர் ‘கெட்ட வார்த்தைகள்’ பேசுவதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.


மொத்தத்தில் ருத்ரன் தாண்டவம் ஆடியதாக சிலரும், தாண்டித்தான் குதித்திருக்கிறார் என பலரும் சொல்லி வருகிறார்கள்.