உலக சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள். அந்த வகையில் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் இந்த ஆண்டு நமது இந்திய திரையுலகம் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் அதற்கு காரணம் இந்திய திரைப்படங்களான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதையும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை குவித்து சாதனை படைத்துள்ளது. 


 




ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு :


எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. சர்வதேச அளவில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் குவித்த இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியதை தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலிலும் இடம்பெற்றது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதை பெற்றது. பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி பரிசுகளை பெற்றுக்கொண்டனர். 



 ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ :


மேலும் சிறந்த ஆவண குறும் படம்  பிரிவின் கீழ்  ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருதை குவித்தது. தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதுமலை சரணாலயத்தில் யானை பாதுகாக்கும் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகளை மையமாக வைத்து இப்படம் வெளியானது. படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனித் மோங்கா விருதை பெற்றுக்கொண்டனர். 


குவியும் வாழ்த்துக்கள் :


ஆஸ்கர் மேடையை கலக்கிய ஆர்.ஆர்.ஆர் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ், நடிகர் பார்த்திபன், நடிகை ஆலியா பட், கீர்த்தி சுரேஷ், கார்த்தி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சுர்ஸ் ரெய்னா, கார்த்திக் சுப்புராஜ், மகேஷ் பாபு, ஜெயம் ரவி, இயக்குநர் ஷங்கர், ராஷ்மிகா மந்தனா, ராகவா லாரன்ஸ்   மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.