பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌளி கையில் எடுத்திருக்கும் திரைப்படம்தான் ரத்தம் , ரணம் , ரௌத்திரம் . இந்த திரைப்படத்தை சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் என அழைக்கின்றனர். 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன் புரமோஷன் வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. 



இந்த நிலையில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஒமைக்ரான் கொரோனா வேரியண்ட் வேகமாக பரவி வருவதால் படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் கூட வழக்கம் போல தனது பாணியில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் “ ஒமைக்ரானை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு யோசனை உள்ளது. அதாவது  ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை பார்க்க இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத யாரையும் அனுமதிக்க மாட்டோம் என கூறுங்கள்.அதன் பிறகு ஒருவருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பார்ப்பதற்கான ஆசை வராது என தெரிவித்திருந்தார்.  







இதனால் நேற்று பலரும் சமூக வலைத்தளங்களில் படத்தின் வெளியீடு தள்ளி போவதாக பேச தொடங்கிவிட்டனர். இது எதிர்பார்ப்பில் இருந்த சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து இயக்குநர் ராஜமௌளி taran adarsh என்னும் பிரபல விமர்சகருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட அவர்  “ ஆர்.ஆர்.ஆர் படம் திட்டமிட்டப்படி வருகிற ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என ராஜமௌளி என்னிடம் தெரிவித்துள்ளார். படம் தள்ளி போவதற்கான வாய்ப்பில்லை “ என குறிப்பிட்டுள்ளார்.






இதன் முலம் படம் திட்டமிட்டப்படி வெளியாவது உறுதியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.