சர்வதேச அளவில் இந்திய படங்களுக்கு வரவேற்பு அதிகமாகி வருகிறது. அதிலும் ஜப்பானில் நமது படங்களுக்கு வரவேற்பே வேறு விதமாக தான் இருக்கும். அங்கு ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு தனி மவுசு உள்ளது என்பதை நிரூபித்தது ரஜினிகாந்தின் முத்து திரைப்படம்.
ஜப்பானில் முத்து படம் செய்த இமாலய சாதனை :
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து ஜப்பானில் 1998ம் ஆண்டு திரையிடப்பட்டது. ஜப்பான் மக்கள் ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு அமோகமான வரவேற்பை கொடுத்தனர். இன்று படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்வதை பார்க்கிறோம். ஆனால் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னரே ஜப்பானில் 23.50 கோடி ரூபாய் வசூல் செய்து இமாலய சாதனையை படைத்தது முத்து திரைப்படம்.
முத்துவை வீழ்த்திய ஆர்ஆர்ஆர் :
தமிழ் திரைப்படம் ஒன்று ஜப்பானில் வெளியாகி முதல் இடத்தை தக்கவைத்திருந்த நிலையில், அந்த சாதனையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது.
இந்திய அளவில் பெரும் சாதனையை படைத்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் கடந்த அக்டோபர் 21ம் தேதி திரையிடப்பட்டது. ஜப்பானில் உள்ள 44 நகரங்களில் 209 ஸ்க்ரீன்கள் மற்றும் 31 ஐமேக்ஸ் திரைகளில் இப்படம் திரையிடப்பட்டு கிட்டத்தட்ட JPY400 மில்லியனை தாண்டி வசூல் செய்துள்ளது.
அந்த வகையில் இத்தனை ஆண்டுகளாக சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த முத்து திரைப்படத்தை 53 நாட்களில், பாக்ஸ் ஆபிஸில் 24.10 கோடி வசூல் செய்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது குறித்து ராஜமௌலி குறிப்பிடுகையில் இது ஒரு நம்பமுடியாத வெற்றி இதை தடுக்க முடியாது என தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இயக்குனர் ராஜமௌலியின் ரசிகர்களை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்ஆர்ஆர் பின்னணி :
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்தது.
படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.