2022இல் அதிகம் பார்க்கப்பட்ட விக்கிப்பீடியா பக்கங்களின் பட்டியலில் ‘கேஜிஎஃப்’ ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் பக்கங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன.
யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளைப் படைத்தது. எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜன மக்களை கண்டம் தாண்டி கவர்ந்த இப்படம் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து எட்டவே முடியாத சாதனையை இந்தியத் திரையுலகில் படைத்துள்ளது.
அதேபோல், எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அண்மையில் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு விக்கிபீடியா தளத்தில் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகளின் பட்டியலில் ’கேஜிஎஃப் 2’ , ’ஆர்.ஆர்.ஆர்’ இரண்டு படங்களும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன.
கேஜிஎஃப் 2, படத்தின் பக்கத்தை ஒரு கோடியே 59 லட்சத்து 54 ஆயிரத்து 912 பேரும், 'ஆர்ஆர்ஆர்' பட பக்கத்தை ஒரு கோடியே 55 லட்சத்து 94 ஆயிரத்து 732 பேரும் பார்வையிட்டுள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' (1,59,82,987 பக்கப் பார்வைகள்), ' 'டாப் கன் மேவரிக்' (1,58,58,877), மற்றும் 'தி பேட்மேன்' (1,48,35,022) ஆகிய திரைப்படங்களின் பக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
விக்கிபீடியா தளத்தில் ஜானி டெப், ஆம்பர் ஹெர்டின் விக்கிபீடியா பக்கங்கள் முறையே 1,95,44,593 மற்றும் 1,90,67,943 பார்வைகளைப் பெற்றுள்ள முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கள் குடும்ப சச்சரவு, விவாகரத்து காரணங்களால் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலிலும் ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இருவரும் முதலிடம் பிடித்தனர்.
அமெரிக்காவில் மாதத்துக்கு 5.6 மில்லியன் தேடல்களுடன் 2022 ஆம் ஆண்டில் அடிக்கடி தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஆம்பர் ஹியர்ட் முதலிடம் பிடித்தார். 5.5 மில்லியன் மாதாந்திர தேடல்களுடன் பட்டியலில் இரண்டாவது ஜானி டெப் இரண்டாம் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.