பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான இப்படம் இன்று வரை பல நூறு கோடிகள் வசூலை குவித்திருக்கிறது. படம் வெளியான 6 நாட்களில் 700 கோடி ரூபாய் வசூலை எட்டி இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில், 700 கோடி ரூபாய் வசூலை எட்டி இருக்கும் ஆறாவது படம் என்ற சாதனையைப் பிடித்திருக்கிறது ஆர்.ஆர்.ஆர்
முன்னதாக, பாகுபலி 2, தங்கல், பத்மாவத், பி.கே ஆகிய படங்கள் இந்த வசூலை எட்டி இருந்தன. இப்போது ஆர்.ஆர்.ஆர் படம் 700 கோடி ரூபாய் வசூலை பிடித்திருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த நான்கு நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என சினிமா வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்