எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அண்மையில் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. அங்கு நாளுக்கு நாள் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகிக்கொண்டே வருகிறது.
ஜப்பானில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி பாகுபலி 2-இன் ஜப்பான் வசூலை முறியடித்து, ஜப்பானில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றது. அப்படியானால் முதல் இடத்தில் எந்த படம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். முதல் இடத்தில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் இருக்கிறது. 1995 ஆம் ஆண்டில் ஜப்பானில் வெளியான முத்து படம் 23.50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதனை முறியடிக்கும் பட்சத்தில் மட்டுமே, ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது, ஆர் ஆர் ஆர் படம் 20 கோடி ரூபாய் வசூலை பெற்று, முத்து படம் ஜப்பானில் தக்கவைத்திருக்கும் முதல் இடத்தை பிடிக்க ரெடியாகி விட்டது.
முன்னதாக ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆர்.ஆர்.ஆர் 2 படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இது குறித்தான அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விருதை வென்ற ராஜமெளலி
மகத்தான சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்ட மற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டாரன் அரோனோஃப்ஸ்கி, சாரா பாலி மற்றும் ஜினா பிரின்ஸ்-பிளைத்வுட் ஆகியோர் மத்தியில் ராஜமௌலியின் வெற்றி பலரை ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது மூலம் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
ஆர் ஆர் ஆர் படம் உருவான பின்னணி
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்தது. படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.