சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படி ஒரு சூப்பரான கூட்டணி தான் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் காம்போ. அப்படி அவர்களின் கூட்டணியில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா. 


இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். மாபெரும் வெற்றி பெற்ற இப்ப படங்களை தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக அவர்கள் கூட்டணி சேர்ந்த திரைப்படம் தான் 'லிங்கா'. 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அனுஷ்கா செட்டி சோனாக்ஷி சின்ஹா, ரவிக்குமார், ஜெகபதி பாபு, சந்தானம், கருணாகரன், ரத்னவேலு, ராக்லைன் வெங்கடேஷ், ரஹ்மான் மற்றும் பலர் நடித்திருந்தனர். 



'லிங்கா' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். இவர் பாலிவுட் நட்சத்திர ஜோடிகள் மற்றும் அரசியல்வாதிகளான சத்ருகன் சின்ஹா மற்றும் பூனம் சின்ஹாவின் மகளாவார்.  லிங்கா படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் ரஜினிகாந்த் சோனாக்ஷி சின்ஹா பற்றி பேசிய பிளாஷ் பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. 


"இப்படத்தில் சோனாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்வது எனக்கு மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. முதல்முறை நான் கேமரா முன்னால் நின்று நடிக்கும் போது கூட இந்த அளவுக்கு நான் பதட்டப்படவில்லை. 


என்னை போல 60 வயது நடிகருக்கு கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்றால் அது டூயட் பாடுவதுதான். படத்தில் ஓடும் ரயிலில் ஸ்டண்ட் செய்வதை காட்டிலும் சோனாக்ஷியுடன் டூயட் பாடுவது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. 


என்னுடைய முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் போது கூட நான் இவ்வளவு டென்ஷனை உணரவில்லை. சோனாக்ஷியை நான் ஒரு குழந்தையைபோல தான் பார்த்திருக்கிறேன். என்னுடைய மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர் சோனாக்ஷி" என பேசி இருந்தார் ரஜினிகாந்த். 



அதே போன்ற ஒரு உணர்வை தான் படத்தின் இரண்டாவது ஹீரோயினான அனுஷ்கா ஷெட்டியுடனும் உணர்ந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். 


முத்து, படையப்பா திரைப்படங்களை தொடர்ந்து 'லிங்கா' திரைப்படம் ஹாட்ரிக் வெற்றி பெரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பல தடைகளையும் தாண்டி ஒரு வழியாக வெளியான இப்படம் படு தோல்வியை சந்தித்தது.