சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ ஷங்கர் தனித்துமான திறமையால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற ரோபோ ஷங்கர் பின்னர் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்தார். அவரின் திறமைக்கு வெள்ளித்திரை வாய்ப்பளித்தது.
உச்ச பட்ச நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் அடுத்ததடுத்து பல படங்களில் நடித்து மிகவும் பிஸியான ஒரு நடிகராக இருந்து வந்தார். சமீபத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
ரோபோ ஷங்கர் உடல் நலத்தில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என அவரின் மனைவி பிரியங்கா தெரிவித்து இருந்தார். இருப்பினும் இணையத்தில் அவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தான் அவரின் உடல் நலம் பாதித்து உடல் மெலிந்து விட்டது என்றும் அவர் பிழைப்பது கடினம் என்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான ஜூன் 26ம் தேதியான இன்று, சென்னை மெரினா கடலோர காவல் படை சார்பில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் தனது தந்தையின் உடல் நலம் குறித்தும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணம் குறித்தும் பேசியிருந்தார். "எனது தந்தை சில மாதங்களாகவே போதைக்கு அடிமையாகி அளவுக்கு அதிகமான குடி பழக்கத்தால் உடல் நல பிரச்சனை ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போது முழுமையாக குடி பழக்கத்தை கைவிட்டு மீண்டும் புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளார். அதனால் நம்முடைய இந்த இளைய தலைமுறையினருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் இது போன்ற போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நினைவில் கொண்டு நமது தமிழ்நாட்டை போதையில்லா தமிழகமாக மாற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
ரோபோ ஷங்கரை போலவே அவரது மகள் இந்திரஜா ஷங்கரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் 'பிகில்' படத்திலும் நடிகர் கார்த்தியுடன் 'விருமன்' படத்திலும் நடித்துள்ளார். விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற போவதாகவும் அவர்களின் பெற்றோர்களின் ஆசையின்படி உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின. விரைவில் இந்திராஜாவின் திருமணம் குறித்த முழு விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது.