தமிழ் தொலைக்காட்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை சிரிக்க வைத்து சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் ரோபோ சங்கர்.
விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து பிற சேனல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் எனக் கலக்கிய ரோபோ சங்கர், 2011ஆம் ஆண்டு ஜீவா நடித்த ’ரௌத்திரம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை சினிமாவில் நடித்து வரும் ரோபோ சங்கர், கடந்த சில மாதங்களாக உடல் மெலிந்து காணப்பட்டார்.
இந்நிலையில் உடல் சோர்ந்திருந்த ரோபோ சங்கர் பற்றி பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவின. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோபோ சங்கர் வழக்கமாக இருக்கும் சுறுசுறுப்பு குறும்புத்தனம் இன்றி மிகவும் உடல் இளைத்து உடல் நலம் குன்றி சோர்வாக காணப்பட்டார். இது அவரின் ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், முன்னதாக ரோபோ சங்கர் உடல் இளைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்ததாகவும், அதனால் தான் இவ்வாறு உடல் எடை குறைந்ததாகவும் அவரது மனைவி முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று மாத காலமாக தொடர் சிகிச்சை மூலம் அவர் குணமடைந்ததாகவும், தூக்கி போட வேண்டிய நிலையில் இருந்தவரை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் ரோபோ சங்கரின் மனைவி பிரியா முன்னதாக தனியார் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கர் சமீபகாலமாக மீண்டும் தொலைக்காட்சிகளில் தலைக்காட்டி வருகிறார். அந்த வகையில், இன்று தன் மனைவி, மகள் என குடும்பத்துடன் இணைந்து ரோபோ சங்கர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
இந்த வீடியோவை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ ரோபோ சங்கர் ரசிகர்களை மகிழ்வித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.