நடிகை பார்வதி நாயர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். தொடர்ந்து நிமிர்ந்து நில், மாலை நேரத்து மயக்கம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்த அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தமிழில் பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் பார்வதி நாயர் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். தற்போது கம் தகம் புத்தகம் என்ற மலையாளப் படத்திலும், பெயரிடப்படாத தெலுங்கு படத்திலும் பார்வதி நாயர் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார்.
அதில் தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர் ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி,செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.