சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தலைவர் 170


ஜெயிலர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு தற்போது த.செ.ஞானவேல் இயக்கும் தனது 170ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். ஜெய் பீம் படத்தில் ஆழமான சமூக கருத்தை பதிவு செய்த இயக்குநர் த.செ.ஞானவேல், இரண்டாவது படத்தில் ரஜினியை இயக்குகிறார்.


இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்க இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் இணைந்துவரும் நடிகர்களில் பெயர்களை வைத்தே சொல்லிவிடலாம். சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன.


ரஜினியுடன் இணையும் நடிகர்கள்


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.


ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ரஜினி இந்தப் படத்தில் போலீஸாக நடிக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வில்லன் கதாபாத்திரத்தின் நடிகர் மற்றும் ரஜினியின் மிகப்பெரிய ரசிகரான ராணா டகுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு நடிகை இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ரித்திகா சிங்


இறுதிச் சுற்று படம் வழியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய நடிகை ரித்திகா சிங் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் போலீஸாக நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், ரித்திகாவும் போலீஸாக நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






லைகா  நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.  அடுத்த ஆண்டில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இந்தப் படத்தின் வேலைகள் நடந்துவர, மறுபக்கம் தற்போது லியோ படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடித்துவிட்டு ரஜினியின் அடுத்தப் படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.