ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா'. 2022ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரலாறு காணாத வெற்றியை பெற்றது. படத்தின் பாடல்களும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. 


 



காந்தாரா சேப்டர் 1 :


குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. கர்நாடக மாநிலத்தின் மலைவாழ் மக்களின் வட்டார தெய்வத்தை அடிப்படையாக கொண்டு உருவான கதை. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே ரிஷப் ஷெட்டி அறிவித்த நிலையில் அப்படத்தில் மிரட்டலான அறிமுக டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 


காந்தாரா படத்தில் காட்சிபடுத்தப்பட்ட கதைக்கு முன்னதாக நடந்த கதையை மையமாக வைத்து 'காந்தாரா 2' உருவாக உள்ளது. 'காந்தாரா சேப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் துவங்கியதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படம் 7 மொழிகளில் உலக அளவில் வெளியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 



ரிஷப் ஷெட்டியின் கருத்து :


அந்த வகையில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரிஷப் ஷெட்டி "இதுவரையில் நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன் ஆனால் காந்தாரா திரைப்படம் தான் என்னை கன்னட ரசிகர்களையும் தாண்டி பிற மொழி ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்தது. நான் கன்னட படங்களில் மட்டுமே நடிப்பேன். கன்னட மக்கள் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தனர். அதற்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். 


பிற மொழி படங்களில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவை அனைத்தையும் நான் நிராகரித்து விட்டேன். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் பிறமொழி படங்களில் நடிக்க மாட்டேன். கன்னட மொழி படங்களில் மட்டுமே நடிப்பேன்" என வெளிப்படையாகவே பேசி இருந்தார். அவரின் இந்த மொழி பற்று கன்னட ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.