காந்தாரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான ஏபிடி வில்லர்ஸை ரிஷப் ஷெட்டி சந்தித்துள்ளார்.
பாகுபலி, ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப் போன்ற மாபெரும் வெற்றி பெற்ற கன்னட திரைப்படங்களின் வரிசையில் தற்போது இடம் பிடித்துள்ளது காந்தாரா. மூலைமுடுக்கெல்லாம் காந்தாரா திரைப்படத்தின் புகழ் பரவ, பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது காந்தாரா திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸை சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி.
அந்த வீடியோ பதிவில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஏபிடி வில்லர்ஸ் மிகவும் குஷியுடன் 'காந்தாரா' என்று திரைப்படத்தின் பெயரைக் கத்தி கூச்சல் இடுகிறார். மேலும் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து பேசுகிறார் ஏபிடி. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டு பெருமிதம் கொள்கிறார் ரிஷப்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கன்னடத்தில் வெளியானது காந்தாரா திரைப்படம். படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் பிறமொழி ரசிகர்களும் படத்தைப் பார்க்க அதிக ஆர்வம் கொண்டனர். இந்நிலையில் அக்டோபர் 15 அன்று, தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ரிலீசானது இந்த திரைப்படம். காந்தாரா திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், பிரபாஸ், ரஜினிகாந்த், அனுஷ்கா ஷெட்டி, ராம் கோபால் வர்மா போன்ற உச்ச நட்சத்திரங்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் காந்தாரா திரைப்படம் தன்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காந்தாரா திரைப்படம் பார்த்துவிட்டு படம் மிகச் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.